பெண்கள் உலகக் கோப்பை: இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் வாழ்வா- சாவா? ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
மும்பை,
13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இந்த தொடரில் இதுவரை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா அணிகள் அரைஇறுதியை உறுதி செய்து விட்டன. வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. எஞ்சிய ஒரு அரைஇறுதி இடத்துக்கு இந்தியா, நியூசிலாந்து, இலங்கை அணிகள் இடையே கடும் மோதல் நிலவுகிறது.
இந்த நிலையில் நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மல்லுகட்டுகின்றன.
இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் இலங்கை, பாகிஸ்தானை பந்தாடியது. அதன் பிறகு தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளிடம் அடுத்தடுத்து தோற்றது. இந்த 3 ஆட்டங்களிலும் வெற்றி வாய்ப்பில் இருந்து முக்கியமான கட்டத்தில் சறுக்கியது. 5 ஆட்டங்களில் ஆடி 4 புள்ளிகள் பெற்றுள்ள இந்தியா ரன்-ரேட் முன்னிலை அடிப்படையில் 4-வது இடத்தில் உள்ளது.
இந்திய அணிக்கு இன்று நடைபெறும் ஆட்டம் மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால் சிக்கலின்றி அரைஇறுதிக்கு முன்னேறி விடும். மாறாக இந்திய அணி தோல்வியை சந்தித்தால், அடுத்த அணியை சார்ந்து இருக்க வேண்டி இருக்கும். அதாவது நியூசிலாந்து அணி தனது கடைசி லீக்கில் இங்கிலாந்திடம் பணிய வேண்டும். அத்துடன் இந்திய அணி இறுதி லீக்கில் வங்காளதேசத்தை வெல்ல வேண்டும். இது போன்ற நிலைமை வராமல் இன்றைய ஆட்டத்திலேயே வெற்றிக்கனியை பறித்து விட வேண்டும் என இந்திய வீராங்கனைகள் தீவிரம் காட்டுகிறார்கள்.
முன்னாள் சாம்பியனான நியூசிலாந்து அணி தனது முதல் இரு ஆட்டங்களில் முறையே ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவிடம் உதை வாங்கியது. 3-வது ஆட்டத்தில் வங்காளதேசத்தை வென்றது. கொழும்பில் நடந்த இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 4 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணிக்கு இந்த ஆட்டம் வாழ்வா-சாவா? மோதலாகும். இந்த ஆட்டத்தில் தோற்றால் நியூசிலாந்து அணியின் அரைஇறுதி கனவு பறிபோய்விடும். நியூசிலாந்து அணி தனது கடைசி இரு ஆட்டங்களிலும் (இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக) வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதி சுற்றை எட்ட முடியும்.
ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து அணியே வெகுவாக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். இவ்விரு அணிகளும் இதுவரை 57 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 34-ல் நியூசிலாந்தும், 22-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் ‘டை’ (சமன்) ஆனது. உலகக் கோப்பையில் 13 முறை மோதியதில் 10-ல் நியூசிலாந்தும், 2-ல் இந்தியாவும் வென்றது. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனதும் இதில் அடங்கும்.
அரைஇறுதி வாய்ப்புக்காக இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது. மும்பை புறநகரான நவிமும்பையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலையில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒரு வேளை ஆட்டம் மழையால் ரத்தானால் அது இந்தியாவுக்கு சாதகமான முடிவாக இருக்கும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்: -
இந்தியா: ஸ்மிர்தி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ரிச்சா கோஷ், அமன்ஜோத் கவுர், சினே ராணா, தீப்தி ஷர்மா, ரேணுகா சிங் அல்லது ஜெமிமா ரோட்ரிக்ஸ், கிரந்தி கவுட், ஸ்ரீ சரனி.
நியூசிலாந்து: சுசி பேட்ஸ், ஜார்ஜியா பிலிமெர், அமெலி கெர், சோபி டிவைன் (கேப்டன்), புரூக் ஹேலிடே, மேடி கிரீன், இசபெல்லா கேஸ், ஜெஸ் கெர், ரோஸ்மேரி மைர், ஈடன் கார்சன், லியா தஹூஹூ.






