உலகக்கோப்பை கிரிக்கெட்: அரைஇறுதிக்கு முன்னேறுமா இந்திய பெண்கள் அணி..? ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்

ஆஸ்திரேலியா அணி வலுவான ரன்ரேட்டில் ஏறக்குறைய அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்டது.
உலகக்கோப்பை கிரிக்கெட்
Published on

லண்டன்,

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்தியா-ஆஸ்திரேலியா

பெண்களுக்கான 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த போட்டித் தொடரில் இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) லீக் சுற்று முடிவடைகிறது. குரூப் 1 பிரிவில் இரண்டு லீக் ஆட்டங்கள் லண்டன் லார்ட்சில் நடக்கின்றன. இதில் தென்ஆப்பி ரிக்கா- வங்காளதேசம் (மாலை 3 மணி), இந்தியா-ஆஸ்திரேலியா (இரவு 7 மணி) அணிகள் மோதுகின்றன.

மிரட்டும் ஆஸ்திரேலிய அணி

சோபி மோலினெக்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மிரட்டுகிறது. அந்த அணி (8 புள்ளி), தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம், நெதர்லாந்து, பாகிஸ்தான் அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி தனது பிரிவில் முதலிடத்தில் இருப்பதுடன், ரன்-ரேட்டிலும் வலுவாக இருப்பதால் ஏறக்குறைய அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்டது.

அரை இறுதிக்கு முன்னேறுமா இந்தியா..?

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தான், நெதர்லாந்தை வீழ்த்தியது. தென்ஆப்பிரிக்காவிடம் பணிந்தது. கடந்த ஆட்டத்தில் வங்காளதேசத்தை தோற்கடித்தது.

6 புள்ளிகளுடன் தனது பிரிவில் 2-வது இடம் வகிக்கும் இந்திய அணிக்கு இது வாழ்வா-சாவா? மோதலாகும். இதில் வெற்றிபெற்றால் இந்திய அணி சிக்கலின்றி அரைஇறுதிக்கு முன்னேறலாம். மாறாக தோற்றால், 6 புள்ளியுடன் இருக்கும் தென்ஆப்பிரிக்க அணி, வங்காளதேசத்ததிடம் தோல்வி அடைந்தால் தான் இந்தியாவால் அரைஇறுதியை எட்ட முடியும்.

பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டும் என்றால் இந்திய அணி தனது மிடில் ஆர்டர் பேட்டிங் பிரச்சினை மற்றும் பீல்டிங் சொதப்பலை சரி செய்வதுடன் எல்லா வகையிலும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும்.

இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் போட்டியில் 38 முறை நேருக்குநேர் மோதி இருக்கின்றன. இதில் 27-ல் ஆஸ்திரேலியாவும், 10-ல் இந்தியாவும் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

X

Daily Thanthi
www.dailythanthi.com