

சென்னை,
நடப்பு 2026 ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன. நேற்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றநிலையில், முதல் ஆட்டத்தில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார்.
ஆனால், அதை அவரால் பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை. 17 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வில் ஜாக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருப்பினும், இப்போட்டியில் ரோகித் சர்மாவின் ஒரு மிகப்பெரிய சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார்.
இப்போட்டியின் முதல் ஓவரிலேயே, தீபக் சாஹர் வீசிய 5-வது பந்தில் ஜெய்ஸ்வால் ஒரு பிரமாண்ட சிக்ஸரை பறக்கவிட்டார். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் இன்னிங்ஸின் முதல் ஓவரில் அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் அவர் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இதற்கு முன் 13 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருந்த ரோகித் சர்மா இப்போது இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். சேவாக், கிறிஸ் கெய்ல் மற்றும் விராட் கோலி ஆகியோர் தலா 12 சிக்ஸர்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளனர்.
முதல் ஓவரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்:
14 சிக்ஸர்கள் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்
13 சிக்ஸர்கள் - ரோகித் சர்மா
12 சிக்ஸர்கள் - சேவாக்
12 சிக்ஸர்கள் - கிறிஸ் கெய்ல்
12 சிக்ஸர்கள் - விராட் கோலி
11 சிக்ஸர்கள் - சுனில் நரைன்
10 சிக்ஸர்கள் - மெக்கல்லம்