4 ஆண்டுகள் கழித்து திடீர் வாய்ப்பு... புவனேஷ்வர் குமாரை தேர்வு செய்ய என்ன காரணம்? - பயிற்சியாளர் பதில்

நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
புவனேஷ்வர் குமார்
Published on: 

ராஞ்சி,

புவனேஷ்வர் குமார், சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். அவரது அனுபவமும், ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டமும் இந்த தேர்வுக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளதாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் தெரிவித்துள்ளார்.

“அனுபவத்துக்கு ஈடு இணையில்லை!”

இதுகுறித்து சிதான்ஷு கோடக் கூறுகையில்,

“இங்கிலாந்து தொடரின்போது பும்ரா இல்லாத நிலையில், பல இளம் பந்துவீச்சாளர்கள் விளையாடியதை பார்த்தபோது, அனுபவத்திற்கு ஈடு இணையில்லை என்பதை நான் உணர்ந்தேன். இளம் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதால்தான் அணியில் இடம்பிடிக்கிறார்கள். இருப்பினும், ஒரு கட்டத்தில் அணிக்கு அனுபவம் வாய்ந்த வீரர்களும் தேவைப்படுகிறார்கள். புவனேஷ்வர் குமாரைத் தேர்வு செய்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

மேலும், புவனேஷ்வர் குமார் கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களிலும் மிகச் சிறப்பாகப் பந்துவீசியுள்ளார். நியூசிலாந்து ஆடுகளங்களுக்கு அவரது அனுபவம் பயனுள்ளதாக இருக்கும் என்று தேர்வாளர்கள் கருதியிருக்கலாம். அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதுடன், அவருடைய அனுபவமும் அணிக்கு தேவைப்படுகிறது. இதை கருத்தில் கொண்டே அவரை தேர்வு செய்திருக்கலாம்,” என்று தெரிவித்தார்.

ஐபிஎல் தொடரில் அசத்திய புவனேஷ்வர்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடும் புவனேஷ்வர் குமார், கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களிலும் சிறப்பாக பந்துவீசியுள்ளார்.

2025 மற்றும் 2026 சீசன்களில் சேர்த்து 30 போட்டிகளில் 45 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில் 2026 சீசனில் மட்டும் 16 போட்டிகளில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவரது சிறப்பான செயல்பாடு ஆர்சிபி அணி தொடர்ந்து இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வெல்ல உதவியது.

நியூசிலாந்து தொடரில் மீண்டும் வாய்ப்பு!

இந்திய அணிக்காக கடைசியாக 2022-ஆம் ஆண்டு நவம்பரில் டி20 போட்டியில் விளையாடிய புவனேஷ்வர் குமார், வருகிற 22-ஆம் தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com