பேட்டிங் பயிற்சியாளராக யுவராஜ் சிங் நியமனம்... ஐபிஎல் கோப்பையை தூக்க டெல்லி போட்ட மாஸ்டர் பிளான்

யுவராஜ் சிங் ஏற்கெனவே 2015-ம் ஆண்டு டெல்லி அணிக்காக விளையாடியுள்ளார்.
பேட்டிங் பயிற்சியாளராக யுவராஜ் சிங் நியமனம்... ஐபிஎல் கோப்பையை தூக்க டெல்லி போட்ட மாஸ்டர் பிளான்
Published on: 

புதுடெல்லி,

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் உதவி மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பயிற்சியாளர் பொறுப்பு

44 வயதான யுவராஜ் சிங், இந்திய அணிக்காக 304 ஒருநாள் போட்டிகள், 40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 58 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் 2011-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிகளில் முக்கிய பங்காற்றினார்.

சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட அனுபவம் கொண்ட அவர், சுப்மன் கில், அபிஷேக் சர்மா, பிரப்சிம்ரன் சிங் உள்ளிட்ட இளம் இந்திய வீரர்களுக்கு வழிகாட்டியாகவும் செயல்பட்டுள்ளார்.

11 ஆண்டுகளுக்குப் பிறகு

யுவராஜ் சிங் ஏற்கெனவே 2015-ம் ஆண்டு டெல்லி அணிக்காக விளையாடியுள்ளார். அப்போது டெல்லி டேர்டெவில்ஸ் என அழைக்கப்பட்ட அந்த அணி, அவரை ரூ.16 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அந்த நேரத்தில் ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

அந்த சீசனில் டெல்லி அணிக்காக 14 போட்டிகளில் விளையாடிய யுவராஜ் சிங், தற்போது 11 ஆண்டுகளுக்குப் பிறகு அதே அணியின் பயிற்சிக் குழுவில் இணைந்துள்ளார்.

கங்குலியுடன் இணைந்து

2027 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், யுவராஜ் சிங்கின் வருகை அணியின் பயிற்சிக் குழுவில் முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. இளம் வீரர்களின் பேட்டிங் திறனை மேம்படுத்துவதிலும், அணியின் செயல்பாட்டை வலுப்படுத்துவதிலும் யுவராஜ் சிங் முக்கியப் பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com