6 பந்துகள்... 6 சிக்ஸர்கள்! யுவராஜ் சிங் சரித்திரம் படைத்த நாள் இன்று!

ஆண்டுகள் கடந்தாலும், செப்டம்பர் 19, 2007 என்றும் யுவராஜ் சிங்கின் அதிரடிக்குச் சான்றாக வரலாற்றில் நிலைத்திருக்கும்!
யுவராஜ் சிங்
Published on

டர்பன்,

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் செப்டம்பர் 19-ம் தேதிக்கு முக்கிய இடம் உண்டு. கடந்த 2007-ம் ஆண்டு இதே நாளில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் யாராலும் மறக்க முடியாத சாதனையை படைத்தார்.

ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள்

2007-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதலாவது டி20 உலகக் கோப்பை தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் யுவராஜ் சிங் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

டர்பனில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது களத்தில் இருந்த யுவராஜ் சிங்குக்கும், இங்கிலாந்து வீரர் ஆண்ட்ரூ பிளின்டாப்புக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.

அப்போது இங்கிலாந்து கேப்டன் பால் காலிங்வுட் 19-வது ஓவரை இளம் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடிடம் கொடுத்தார். அந்த ஓவரின் 6 பந்துகளையும் யுவராஜ் சிங் சிக்ஸருக்கு பறக்கவிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

12 பந்துகளில் அரைசதம்

இந்த 6 சிக்ஸர்களுடன் யுவராஜ் சிங் வெறும் 12 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் அப்போது அவர் படைத்தார். மேலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

முன்னதாக, 2007-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவின் ஹெர்ஷல் கிப்ஸ் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்திருந்தார். ஆனால், டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இந்த சாதனையை முதலில் செய்தவர் யுவராஜ் சிங்தான்.

16 பந்துகளில் 58 ரன்கள்

அந்த ஆட்டத்தில் யுவராஜ் சிங் வெறும் 16 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் விளாசினார்.

அவரது அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் இந்திய அணி 20 ஓவர்களில் 218 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆண்டுகள் கடந்தாலும், செப்டம்பர் 19, 2007 என்றும் யுவராஜ் சிங்கின் அதிரடிக்குச் சான்றாக வரலாற்றில் நிலைத்திருக்கும்!

X

Daily Thanthi
www.dailythanthi.com