ஓய்வை அறிவித்த யுஸ்வேந்திர சஹால்

சஹால் நவம்பர் 3, 2009 அன்று மத்தியப் பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பைப் போட்டியில் அரியானா அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
யுஸ்வேந்திர சஹால்
Published on: 

சென்னை,

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சஹால், முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் தனது கடைசி முதல் தரப் போட்டியை விளையாடிய பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

“எனது முதல் கிரிக்கெட் பந்தே சிவப்புப் பந்து”

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனது 10 வயதில் முதன்முதலில் கையில் எடுத்த கிரிக்கெட் பந்து சிவப்புப் பந்துதான் என்று குறிப்பிட்டுள்ள அவர், சிவப்புப் பந்து கிரிக்கெட் தனக்கு பொறுமை, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பை கற்றுக்கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

களத்தில் நீண்ட நேரம் நின்று, ஒவ்வொரு ரன்னுக்காகவும் ஒவ்வொரு விக்கெட்டுக்காகவும் போராடுவதில் இருக்கும் உண்மையான மகிழ்ச்சியை சிவப்புப் பந்து கிரிக்கெட் தனக்கு கற்றுக் கொடுத்ததாகவும் சஹால் கூறியுள்ளார்.

லார்ட்ஸில் கடைசி போட்டி

தனது கடைசி முதல் தரப் போட்டியை லண்டனில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடியது தனது கிரிக்கெட் வாழ்க்கையில் எப்போதும் நினைவில் இருக்கும் தருணம் என்றும் சஹால் தெரிவித்துள்ளார்.

நிறைவேறாத டெஸ்ட் கனவு

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடி, டெஸ்ட் தொப்பியை அணிய வேண்டும் என்பது பல ஆண்டுகளாக தனது கனவாக இருந்ததாக சஹால் தெரிவித்துள்ளார். அந்தக் கனவு நிறைவேறவில்லை என்றாலும், தனது நீண்ட சிவப்புப் பந்து கிரிக்கெட் பயணத்தை நினைத்து மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

2009-ல் தொடங்கிய பயணம்

சஹால் நவம்பர் 3, 2009 அன்று மத்தியப் பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பைப் போட்டியில் அரியானா அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com