சிஎஸ்கே அணிக்கு எதிராக எந்த ஒரு வீரரும் படைத்திராத சாதனையை படைத்த யுஸ்வேந்திர சாஹல்

சென்னைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சாஹல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
சிஎஸ்கே அணிக்கு எதிராக எந்த ஒரு வீரரும் படைத்திராத சாதனையை படைத்த யுஸ்வேந்திர சாஹல்
Published on

சென்னை,

ஐ.பி.எல். தொடரில், சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு அரங்கேறிய 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 19.2 ஓவர்களில் 190 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாம் கர்ரன் 88 ரன்கள் அடித்தார். ஒரு கட்டத்தில் 200 ரன்களை எளிதில் தாண்டுவது போல் சென்ற ஸ்கோர் கடைசி 18 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்ததால் அந்த ஸ்கோரை அடைய முடியாமல் போய் விட்டது. பஞ்சாப் தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 194 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 72 ரன்கள் அடித்தார்.

இந்த ஆட்டத்தில் சென்னை அணி பேட்டிங் செய்தபோது 19-வது ஓவரை வீசிய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு பறக்க விட்ட தோனி (11 ரன்) மீண்டும் ஒரு சிக்சருக்கு முயற்சித்தபோது, எல்லைக்கோடு அருகே கேட்ச் ஆகிப்போனார். இந்த ஓவரின் 4-வது பந்தில் தீபக் ஹூடா (2 ரன்), அன்ஜூல் கம்போஜ் (0), நூர் அகமது (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வரிசையாக வீழ்த்தி சாஹல் 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார்.

இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை யுஸ்வேந்திர சாஹல் படைத்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com