

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 15 வயதே ஆன இளம் வீரரான சூர்யவன்ஷி வியக்க வைத்து வருகிறார். தனது அதிரடி பேட்டிங்கால் , உலகின் தலைசிறந்த பவுலர்களை கூட மிரள வைத்து வருகிறார். 20 ஓவர் போட்டிகளில்,தான் சாதிக்க விரும்பும் சாதனை எது என்பது பற்றி சூர்யவன்ஷி பேசியுள்ளார். இதுபற்றி சூர்யவன்ஷி கூறியதாவது: 20 ஓவர் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்லின் 175* ரன்கள் சாதனையை முறியடிப்பதுடன், இந்த வடிவில் முதல் முறையாக இரட்டை சதம் அடிக்கவும் இலக்கு வைத்துள்ளேன்”என்றார்.
ஐபிஎல் 2013 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய கிறிஸ் கெய்ல், புனே வாரியர்ஸ் இந்தியா அணிக்கு எதிராக 175 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். 66 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 17 சிக்ஸர்களுடன், 265.15 என்ற ஸ்டிரைக் ரேட்டில் இந்த ரன்களை குவித்தார். இந்த போட்டியில் 30 பந்துகளில் சதம் அடித்த கெய்லின் சாதனை, இன்றளவும் ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதமாக உள்ளது.
கடந்த ஆண்டு 14 வயதில் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி, இளம் வீரராக சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி, இந்த சீசனில் பேட்டிங்கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.14 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 583 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதமும், மூன்று அரைசதங்களும் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 103 ரன்கள் ஆகும். மேலும், இந்த சீசனில் மட்டும் 53 சிக்ஸர்கள் அடித்துள்ள சூர்யவன்ஷி, ஒரே ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். தற்போது, கிறிஸ் கெய்ல் 2012 ஐபிஎல் தொடரில் அடித்த 59 சிக்ஸர்கள் என்ற சாதனையை முறியடிக்க இன்னும் 7 சிக்ஸர்கள் மட்டுமே அவருக்கு தேவைப்படுகிறது.