

நியூயார்க்,
அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய 23-வது பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 48 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி, தனது 2-வது உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 104 போட்டிகள் நடைபெற்றன. இதில் 308 கோல்கள் பதிவாகி, உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல் அடிக்கப்பட்ட தொடராக இது அமைந்துள்ளது.
இதில் பிரான்ஸ் அணியின் எம்பாப்பே 10 கோல்கள் அடித்து முதலிடத்தை பிடித்து கோல்டன் பூட் விருதை வென்றார். அவரை தொடர்ந்து அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்சி 8 கோல்களுடன் 2-வது இடம் பிடித்தார். இங்கிலாந்தின் ஜுட் பெல்லிங்காம் மற்றும் நார்வேயின் எர்லிங் ஹாலண்ட் தலா 7 கோல்கள் அடித்தனர். மேலும், இங்கிலாந்தின் ஹாரி கேன்மற்றும் பிரான்சின் உஸ்மான் டெம்பேலே தலா 6 கோல்கள், உலக சாம்பியனான ஸ்பெயின் அணியின் மிகேல் ஓயர்சபால் 5 கோல்கள் அடித்தனர்.
அணிகள் அடிப்படையில் பார்க்கும்போது, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகள் தலா 20 கோல்கள் அடித்து அதிக கோல்கள் பதிவு செய்த அணிகளாக திகழ்ந்தன. அர்ஜென்டினா 19 கோல்களும், உலக சாம்பியனான ஸ்பெயின் அணி 14 கோல்களும் பதிவு செய்துள்ளன.