

மெக்சிகோ,
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடர் கடந்த ஜூன் 11-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த முறை மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து உலகக் கோப்பை தொடரை நடத்தி வருகின்றன.
உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக 48 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. அணிகள் 12 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகளும், மூன்றாவது இடம் பெறும் சிறந்த 8 அணிகளும் சேர்த்து மொத்தம் 32 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற உள்ளன.
பிபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி வியாழக்கிழமை நள்ளிரவு வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. ரசிகர்களின் பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் மெக்ஸிகோ மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
2026 பிபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவை முன்னிட்டு, உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தனது ஹோம்பேஜில் சிறப்பு ‘டூடுல்’ சித்திரத்தை வெளியிட்டுள்ளது. இந்த டூடுல், கால்பந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தனது முகப்புப் பக்க லோகோவை உலகக் கோப்பை திருவிழாவை நினைவூட்டும் வகையில் மாற்றி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது கூகுள்.