

லிஸ்பன்,
48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 11-ம் தேதி அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் தொடங்குகிறது. இதற்கான தயாரிப்பில் அணிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், சர்வதேச நட்புறவு மற்றும் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் போர்ச்சுகல் மற்றும் சிலி அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் லிஸ்பனில் நடைபெற்றது. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போர்ச்சுகல் அணிக்காக கோன்கலோ குவேடெஸ் 58-வது நிமிடத்திலும், புருனோ பெர்னாண்டஸ் 75-வது நிமிடத்திலும் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
போட்டியின் முதல் பாதி முடிவடையும் தருவாயில், 45-வது நிமிடத்தில் பந்தை கைப்பற்றும் முயற்சியில் ஏற்பட்ட மோதல் இரு அணி வீரர்களிடையே தள்ளுமுள்ளாக மாறியது. இதில் சிலி வீரர் இவான் ரோமனின் முகத்தில் போர்ச்சுகல் வீரர் ரபேல் லியோ தாக்கினார். இதனால் ரோமன் மைதானத்தில் சரிந்தார். நடுவர்கள் உடனடியாக தலையிட்டு சூழ்நிலையை கட்டுப்படுத்தினர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ரபேல் லியோ மற்றும் இவான் ரோமன் ஆகிய இருவருக்கும் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.
எனினும், ரபேல் லியோவின் நடத்தை தொடர்பாக கூடுதல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு ஒன்று அல்லது இரண்டு போட்டிகள் தடை விதிக்கப்பட்டால், உலகக் கோப்பையின் தொடக்க கட்ட ஆட்டங்களை தவறவிடும் நிலை உருவாகலாம். விசாரணைக்குப் பிறகே இறுதி நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.