

பர்மிங்காம்,
பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் முக்கிய ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லா மற்றும் லிவர்பூல் அணிகள் மோதின. ஆஸ்டன் வில்லாவின் சொந்த மைதானமான வில்லா பார்க்கில் நடைபெற்ற இப்போட்டியில், அந்த அணியின் நட்சத்திர வீரர் ஒல்லி வாட்கின்ஸ் இரண்டு கோல்களை அடித்து அணியின் வெற்றிக்குக் காரணமானார்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்டன் வில்லா அணி 37 போட்டிகளில் 62 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியதுடன், அடுத்த சீசனுக்கான சாம்பியன்ஸ் லீக் தகுதியையும் உறுதி செய்தது. மறுபுறம், இந்தத் தோல்வியால் லிவர்பூல் அணி 59 புள்ளிகளுடன் 5-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் சாம்பியன்ஸ் லீக் இடத்தைப் பிடிக்க அந்த அணி அடுத்த போட்டிகளில் கடுமையாகப் போராட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
போட்டியின் முதல் பாதியில் லிவர்பூல் அணி சிறப்பாக விளையாடிய போதிலும், ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் ஆஸ்டன் வில்லாவின் மோர்கன் ரோஜர்ஸ் முதல் கோலை அடித்து தனது அணிக்கு 1-0 என முன்னிலை தேடித்தந்தார்.
இரண்டாவது பாதியின் 53-வது நிமிடத்தில், லிவர்பூல் அணியின் கேப்டன் விர்ஜில் வான் டைக் ஒரு சிறப்பான ஹெட்டர் மூலம் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமநிலைக்குக் கொண்டு வந்தார். தொடர்ந்து ஆஸ்டன் வில்லா வீரர் ஒல்லி வாட்கின்ஸ் கோல் அடித்து மீண்டும் தனது அணியை முன்னிலைப்படுத்தினார் (2-1).
தொடர்ந்து வாட்கின்ஸ் ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலைப் பதிவு செய்தார் (3-1). ஆட்டம் முடிய 2 நிமிடங்கள் இருந்தபோது கேப்டன் ஜான் மெக்கின் ஆஸ்டன் வில்லாவின் 4-வது கோலை அடித்தார் (4-1). ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் லிவர்பூல் கேப்டன் வான் டைக் மீண்டும் ஒரு ஹெட்டர் கோல் அடித்த போதிலும், அது ஆட்டத்தின் முடிவை மாற்ற உதவவில்லை. இறுதியில் ஆஸ்டன் வில்லா அணி 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. நடப்பு சீசனில் லிவர்பூல் அணி சந்திக்கும் 12-வது தோல்வி இதுவாகும்.