

மான்செஸ்டர்,
ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டரில் நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய (ரவுண்ட் 16) ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) அணி 2-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டியை (இங்கிலாந்து) வீழ்த்தியது. ரியல் மாட்ரிட் அணியில் வினிசியஸ் ஜூனியர் (22, 90-வது நிமிடம்) 2 கோல் அடித்தார்.
மான்செஸ்டர் சிட்டி அணியின் கேப்டன் பெர்னார்டோ சில்வா 20-வது நிமிடத்தில் நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு அந்த அணி 10 வீரர்களுடன் விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஏற்கனவே அந்த அணிக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்த ரியல் மாட்ரிட் அணி ஒட்டுமொத்தத்தில் 5-1 என்ற கோல் கனக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
லண்டனில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்) அணி 3-0 என்ற கோல் கணக்கில் செல்சி (இங்கிலாந்து) கிளப்பை தோற்கடித்தது. அந்த அணிக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் 5-2 என்ற கோல் கணக்கில் வென்றிருந்த பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணி மொத்தத்தில் 8-2 என்ற கோல் கணக்கில் வெற்றியை தனதாக்கி காலிறுதிக்குள் நுழைந்தது.