பரபரப்பான ஆட்டம்... சூப்பர் ஓவரில் லக்னோவை வீழ்த்தியது கொல்கத்தா

கடைசி பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முகமது சமி சிக்சர் அடித்ததால், ஆட்டம் சமனில் முடிந்தது.
பரபரப்பான ஆட்டம்... சூப்பர் ஓவரில் லக்னோவை வீழ்த்தியது கொல்கத்தா
Published on

லக்னோ,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லக்னோவில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்திற்கான் டாஸை வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் ஆடியது.

தொடக்க வீரர்களாக அஜிங்க்யா ரஹானே மற்றும் டிம் சைபர்ட் களமிறங்கினர். இதில், சைபர்ட் 0(3) ரன்களிலும் ரஹானே 10(15) ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். தொடர்ந்து வந்த அன்குஷ் ரகுவன்சி 9(8) ரோவ்மன் பவல் 1(4) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் இணைந்த கேமரூன் கிரீன் - ரிங்கு சிங் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அப்போது 35(21) ரன்கள் அடித்தநிலையில், கேமரூன் கிரீன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த அனுகுல் ராய் 0(1) ரன் அடிக்காமல் வெளியேற ரமந்தீப் சிங் களமிறங்கினார். அவரும் 6(11) ரன்களில் அவுட்டானார். பின்னர் ரிங்கு சிங்குடன் சுனில் நரைன் ஜோடி சேர்ந்தார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் விழ மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ரிங்கு சிங் அரைசதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடி காட்டிய ரிங்கு சிங் கடைசி ஓவரில் 4 சிக்சர்களை பறக்கவிட்டார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிங்கு சிங் 83 ரன்கள் எடுத்தார். லக்னோ தரப்பில் அதிகபட்சமாக மோசின் கான் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ களமிறங்கியது.

மிட்சேல் மார்ஷ் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர், மார்க்ரமும் ரிஷப் பண்ட்டும் இணைந்து நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். மார்க்ரம் தன் பங்குக்கு 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் 42 ரன்கள் எடுத்தார். பதோனி 22 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

ஆட்டத்தில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் லக்னோ அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தை எதிர்கொண்ட முகமது சமி, சிக்சருக்கு பறக்கவிட்டார். இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது.

இதன் பின்னர் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரை சுனில் நரேன் வீசினார். முதல் பந்தில் பூரன் அவுட்டானார். 2-வது பந்தில் ரிஷப் பண்ட் ஒரு ரன் எடுக்க, 3-வது பந்தை சிக்சருக்கு அடிக்க முயற்சி செய்து மார்க்ரம் எல்லைக்கோடு அருகே ஆட்டமிழந்தார். இதனால் லக்னோ அணி சூப்பர் ஓவரில் 1 ரன்னே எடுத்தது. (சூப்பர் ஓவரில் 2 விக்கெட்டுகள் விழுந்தால், அதன் பின்னர் எஞ்சிய பந்துகளை எதிர்கொள்ள முடியாது)

இதன் பின்னர் 2 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து வெற்றியை உறுதிசெய்தது. இதன் மூலம் பரபரப்பான ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி தனது 2-வது வெற்றியை பதிவுசெய்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com