சாம்பியன்ஸ் லீக் வரலாற்றிலேயே அதிவேக 60 கோல்கள்... மெஸ்ஸியை பின்னுக்குத் தள்ளி ஹாலண்ட் சாதனை

மான்செஸ்டர் சிட்டி- பிஎஸ்ஜி அணிகள் மோதின.
 எர்லிங் ஹாலண்ட்
Published on: 

மான்செஸ்டர்,

மான்செஸ்டர் சிட்டி வீரர் எர்லிங் ஹாலண்ட் புதிய சாதனை படைத்தார்.

மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்திய பிஎஸ்ஜி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி- பிஎஸ்ஜி அணிகள் மோதின.

இதில் ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிஎஸ்ஜி அணிக்கு 13-வது நிமிடத்தில் டெசிரே டூயே முதல் கோலை அடித்தார். அடுத்த 2 நிமிடங்களில் உஸ்மான் டெம்பேலே கோல் அடிக்க, பிஎஸ்ஜியின் முன்னிலை 2-0 ஆனது.

தொடர்ந்து 32-வது நிமிடத்தில் விட்டின்ஹா கோல் அடித்தநிலையில், முதல் பாதியின் முடிவில் பிஎஸ்ஜி அணி 3-0 என முன்னிலை பெற்றது.

ஹாலண்டின் இரட்டை கோல்கள் வீண்

இரண்டாவது பாதியில் மான்செஸ்டர் சிட்டி அணி பதிலடி கொடுக்கத் தொடங்கியது. 53-வது நிமிடத்தில் எர்லிங் ஹாலண்ட் கோல் அடித்து வித்தியாசத்தை குறைத்தார். ஆனால், 62-வது நிமிடத்தில் மக்னெஸ் அக்லியூஷ் கோல் அடிக்க பிஎஸ்ஜியின் முன்னிலை மீண்டும் அதிகரித்தது.

75-வது நிமிடத்தில் ஹாலண்ட் தனது இரண்டாவது கோலை அடித்தார். இருப்பினும், அதன் பிறகு சிட்டி அணியால் மேலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பிஎஸ்ஜி அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஹாலண்ட் சாதனை

இந்த போட்டியில் தோல்வியடைந்திருந்தாலும் இரண்டு கோல்களை அடித்த ஹாலண்ட், சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் 60 கோல்களை எட்டிய வேகமான வீரர் என்ற சாதனையைப் படைத்தார். வெறும் 60 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டிய அவர், லியோனல் மெஸ்ஸியின் 80 போட்டிகள் என்ற முந்தைய சாதனையை முறியடித்தார்.

மேலும், 26 வயது மற்றும் 85 நாட்களில் 60 கோல்களை எட்டியதன் மூலம், இந்த சாதனையை படைத்த இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com