விமர்சனத்துக்குள்ளான ரொனால்டோ - பதிலடி கொடுத்த ரூபன் டயாஸ்

போர்ச்சுகல் அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் 23-ம் தேதி உஸ்பெகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
விமர்சனத்துக்குள்ளான ரொனால்டோ  - பதிலடி கொடுத்த ரூபன் டயாஸ்
Published on

போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஆதரவாக அந்த அணியின் டிபெண்டர் ரூபன் டயாஸ் பேசியுள்ளார்.

டிராவில் முடிந்த முதல் போட்டி

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் 'கே' பிரிவில் இடம்பெற்றுள்ள போர்ச்சுகல் அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் காங்கோ அணியுடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. இந்த போட்டியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஆட்டம் விமர்சிக்கப்பட்டது.

விமர்சனத்துக்குள்ளான ரொனால்டோ

தனது 6-வது உலகக் கோப்பையில் விளையாடி வரும் ரொனால்டோ, காங்கோவுக்கு எதிரான ஆட்டத்தில் 25 முறை மட்டுமே பந்தை தொட்டார். இலக்கை நோக்கி ஒரு ஷாட் கூட அடிக்கவில்லை. அத்துடன், சக வீரர்களுக்கு அசிஸ்ட் வழங்கவில்லை. எதிரணி வீரர்களை டிரிபிள் செய்து கடக்கவும் தவறினார். இதனால், அவருக்கு பதிலாக இளம் வீரரை களமிறக்கினால் போர்ச்சுகலின் தாக்குதல் ஆட்டம் இன்னும் சிறப்பாக இருக்கும் என பலரும் விமர்சித்தனர்.

"ரொனால்டோவுக்கு ஆதரவாக அணி எப்போதும் இருக்கும்" - ரூபன் டயாஸ்

இந்த நிலையில், போர்ச்சுகல் அணியின் முக்கிய தடுப்பாட்ட வீரரான ரூபன் டயாஸ், ரொனால்டோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:-

"இது ரோனால்டோவுக்கு புதிதல்ல. கிளப் போட்டிகள், தேசிய அணி மற்றும் உலகளாவிய தொடர்களில் அவர் இதை ஏற்கனவே பலமுறை சந்தித்துள்ளார். பெரிய தொடர்களில் எல்லாமே சரியாக அமைந்துவிடாது.

இந்த விமர்சனங்கள் எங்களுக்கு பெரிதல்ல. இதெல்லாம் வெறும் வீண் சத்தம்தான். ஒரு போட்டி சரியாக அமையாதபோது இதுபோன்ற விஷயங்கள் சகஜம். தேவையில்லாத விமர்சனங்களை நாங்கள் காதில் வாங்கி கொள்வதில்லை." என்றார்.

அடுத்த போட்டி

குரூப் 'கே' பிரிவில் போர்ச்சுகல் அணி தனது அடுத்த லீக் போட்டியில் வருகிற 23-ம் தேதி உஸ்பெகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. அதன்பிறகு, ஐந்து நாட்கள் கழித்து கொலம்பியா அணியுடன் மோதுகிறது.

முதல் போட்டியில் ஏமாற்றமளித்த நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்ற முனைப்பில் போர்ச்சுகல் அணி களமிறங்க உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com