

மெக்சிகோ சிட்டி,
23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற 'சுற்று-16' போட்டியில் மெக்சிகோவை வீழ்த்தி இங்கிலாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியநிலையில், அந்த வெற்றியை கொண்டாடியபோது இங்கிலாந்து வீரர் ஹென்டர்சனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
மெக்சிகோ சிட்டியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டி முடிந்ததும், வெற்றியை உற்சாகமாக கொண்டாடிய இங்கிலாந்து வீரர் ஹென்டர்சன், மைதானத்தில் இருந்த விளம்பர தடுப்புகள் மீது ஏறியபோது எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்தார்.
இந்த விபத்தில் அவரது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டதாக இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் தாமஸ் துஹெல் தெரிவித்துள்ளார். தற்போது ஹென்டர்சன் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
ஏற்கனவே, இங்கிலாந்து அணியின் ரீஸ் ஜேம்ஸ் தொடைப் பகுதி தசையில் (ஹாம்ஸ்ட்ரிங்) காயமடைந்திருக்கும் நிலையில், தற்போது ஹென்டர்சனும் காயமடைந்திருப்பது அந்த அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ள இங்கிலாந்து அணி, அடுத்ததாக நார்வே அணியை எதிர்கொள்கிறது. இந்த காலிறுதி போட்டி மியாமியில் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.