

டொரோண்டோ,
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் இ பிரிவில் இடம்பெற்றுள்ள ஜெர்மனி மற்றும் ஐவரி கோஸ்ட் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் கனடாவின் டொரோண்டோவில் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜெர்மனி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஐவரி கோஸ்டை வீழ்த்தி தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது.
ஆட்டம் தொடங்கிய உடனேயே ஐவரி கோஸ்ட் அணி தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதன் பலனாக, 30-வது நிமிடத்தில் பிராங்க் கெஸ்ஸி கோல் அடித்து அணியை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற செய்தார்.
இரண்டாவது பாதி ஆட்டத்தின்போது ஜெர்மனிக்கு எதிராக 1-0 என்ற கோல் கணக்கில் ஐவரி கோஸ்ட் முன்னிலை வகித்தது. இதனையடுத்து ஜெர்மனி சார்பில் மாற்று வீரராக டெனிஸ் உண்டாவ் களமிறக்கப்பட்டார். களமிறங்கிய சிறிது நேரத்திலேயே (60-வது நிமிடத்தில்) உண்டாவ் ஒரு கோலை அடித்து 1-1 என்று சமநிலைக்கு கொண்டு வந்தார்.
பின்னர் ஜெர்மனி அணி தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியது. ஆனால் ஐவரி கோஸ்ட் அணியின் சிறப்பான தடுப்பாட்டம் காரணமாக அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில், மாற்று வீரராக களமிறக்கப்பட்ட டெனிஸ் உண்டாவ் மீண்டும் ஒரு கோலை அடித்து ஜெர்மனி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
முழு நேர முடிவில் ஜெர்மனி அணி 2-1 என்ற கணக்கில் ஐவரி கோஸ்டை வீழ்த்தி தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி அணி 32 அணிகள் கொண்ட சுற்றுக்கு முன்னேறியது.
டெனிஸ் உண்டாவ், ஜெர்மனி அணிக்காக 11 சர்வதேசப் போட்டிகளில் ஒன்பது கோல்களை அடித்துள்ளார். மேலும் நடைபெற்று வரும் உலகக் கோப்பைப் போட்டியிலேயே, மாற்று வீரராகக் களமிறங்கிய இரண்டு ஆட்டங்களில் மூன்று கோல்களை அடித்தது குறிப்பிடத்தக்கது.