

வாஷிங்டன்,
பிபா (FIFA) கால்பந்து உலகக்கோப்பைத் தொடரில், ஈரான் அணிக்கு மாற்றாகப் பங்கேற்க இத்தாலிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பினை இத்தாலி அதிரடியாக நிராகரித்துள்ளது.
அமெரிக்க அதிபரின் இந்த அழைப்பு குறித்துக் கருத்து தெரிவித்துள்ள இத்தாலி விளையாட்டுத் துறை மந்திரி ஆண்ட்ரியா, "ஈரானுக்குப் பதிலாக இத்தாலி விளையாடுவதற்கு வாய்ப்பே இல்லை. இது ஒரு நல்ல யோசனையும் அல்ல" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தனது கோரிக்கை குறித்து விளக்கம் அளித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், "இந்த அழைப்பு அரசியல் ரீதியானது அல்ல. ஈரான் அணி கடைசி நிமிடத்தில் தொடரிலிருந்து விலகினால், அதற்கான ஒரு மாற்றுத் திட்டமாகவே (Back-up plan) இத்தாலிக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டது" என்று கூறியுள்ளார்.
கால்பந்து உலகின் ஜாம்பவானாகக் கருதப்படும் இத்தாலி அணி, இதுவரை 4 முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. இருப்பினும், அந்த அணி தற்போது கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. இத்தாலி அணி தொடர்ச்சியாக 3-வது முறையாக உலகக்கோப்பைத் தொடருக்குத் தகுதி பெறவில்லை. தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று நுழையாத நிலையில், மாற்று அணியாக உள்ளே நுழைய இத்தாலி மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.