

சான் பிரான்சிஸ்கோ,
23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 48 அணிகள் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகளும், 3-வது இடத்தில் இருக்கும் சிறந்த 8 அணிகளும் சேர்த்து மொத்தம் 32 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற உள்ளன.
இந்த நிலையில், சான் பிரான்சிஸ்கோவில் இந்திய நேரப்படி இன்று காலை 9.30 நடைபெற்ற ‘ஜெ’ பிரிவு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரியா மற்றும் ஜோர்டான் அணிகள் மோதின
ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின. 21-வது நிமிடத்தில் ஆஸ்திரியா வீரர் ரோமானோ ஷ்மிட் கோல் அடித்து அணியை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற செய்தார். அதன் பின்னர் சமநிலை கோலுக்காக ஜோர்டான் கடுமையாக போராடிய போதிலும், முதல் பாதி முடிவில் ஆஸ்திரியா முன்னிலையை தக்க வைத்து கொண்டது.
இரண்டாம் பாதியில் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்திய ஜோர்டான் அணிக்கு, 50-வது நிமிடத்தில் அலி ஓல்வான் கோல் அடித்து 1-1 என சமநிலையை ஏற்படுத்தினார். இதனால் ஆட்டம் மேலும் பரபரப்பானது.
ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் ஆஸ்திரியாவின் மார்கோ அர்னாடோவிச் கோல் அடித்தார். ஆனால், வீடியோ பரிசோதனைக்கு பிறகு அது ஹேண்ட்பால் என அறிவிக்கப்பட்டது. இதனால் கோல் செல்லாமல் போக ஆஸ்திரிய வீரர்கள் ஏமாற்றமடைந்தனர்.
பின்னர் 76-வது நிமிடத்தில் ஜோர்டான் வீரர் யாசன் அல்-அரப் துரதிர்ஷ்டவசமாக ஓன் கோல் அடித்ததால், ஆஸ்திரியா 2-1 என்ற கணக்கில் மீண்டும் முன்னிலை பெற்றது. இதையடுத்து சமநிலை கோலுக்காக ஜோர்டான் அணியும், மேலும் ஒரு கோலுக்காக ஆஸ்திரியாவும் கடுமையாக போராடின. அப்போது ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் ஆஸ்திரியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திய மார்கோ அர்னாடோவிச் கோல் அடித்து 3-1 என முன்னிலை பெற வைத்தார்.
இறுதியில், 3-1 என்ற கோல் கணக்கில் ஜோர்டானை வீழ்த்திய ஆஸ்திரியா அணி, 3 புள்ளிகளை கைப்பற்றி ‘ஜெ’ பிரிவில் 2-வது இடத்திற்கு முன்னேறியது. மெஸ்சியின் ஹாட்ரிக் கோலுடன் அல்ஜீரியாவை வீழ்த்திய அர்ஜென்டினா அணி முதலிடத்தில் நீடித்து வருகிறது.