

நடப்பு பிபா உலக கோப்பையில் புதிய விதி அமலுக்கு வந்துள்ளது. இதற்கு முதல் ஆளாக தண்டிக்கப்பட்டுள்ளார் பராகுவே வீரர்.
நடப்பு பிபா உலகக் கோப்பை தொடரில் வீரர்களின் நடத்தை தொடர்பாக புதிய விதி ஒன்று அமல்படுத்தப்பட்டுள்ளது. போட்டியின்போது வாயை மூடிக்கொண்டு எதிரணி வீரரிடம் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பிபா தெரிவித்திருந்தது.
குரூப் டி பிரிவில் துருக்கி அணிக்கு எதிராக நடைபெற்ற இண்றைய ஆட்டத்தில் பராகுவே வீரர் மிகுவெல் அல்மிரோன், எதிரணி வீரர் முல்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் தனது வாயை மூடிக்கொண்டு ஏதோ பேசினார். இதையடுத்து, சம்பவம் குறித்து துருக்கி வீரர் முல்தர் நடுவரிடம் முறையிட்டார். பின்னர் வீடியோ உதவி நடுவர் (VAR) மூலம் காட்சிகள் பரிசோதிக்கப்பட்டன.
அந்த ஆய்வுக்குப் பிறகு, மிகுவெல் அல்மிரோனுக்கு நடுவர் ரெட் கார்டு காட்டி வெளியேற்றினார். இதன் மூலம், வாயை மூடி பேசியதற்காக ரெட் கார்டு பெற்ற முதல் வீரர் என்ற மோசமான சாதனையை அல்மிரோன் பதிவு செய்துள்ளார்.
வாயை மூடிக்கொண்டு பேசும்போது அவமதிப்பான வார்த்தைகள் அல்லது ரகசிய தகவல்கள் பரிமாறப்படுவதை தடுக்கும் நோக்கில் இந்த புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் முதல் தாக்கமாக பராகுவே வீரர் மிகுவெல் அல்மிரோன் ரெட் கார்டு பெற்று உலகக் கோப்பை வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
அல்மிரோன் வெளியேறிய பிறகு 10 வீரர்களுடன் விளையாடியபோதும் பராகுவே அணி, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.