உலகக் கோப்பை கால்பந்து: ஈரான் - நியூசிலாந்து ஆட்டம் டிரா... ‘ஜி’ பிரிவில் நீடிக்கும் பரபரப்பு

இந்த டிரா காரணமாக ‘ஜி’ பிரிவில் உள்ள அணிகள் அனைத்தும் தலா ஒரு புள்ளியுடன் சமநிலையில் உள்ளன.
உலகக் கோப்பை கால்பந்து: ஈரான் - நியூசிலாந்து ஆட்டம் டிரா... ‘ஜி’ பிரிவில் நீடிக்கும் பரபரப்பு
Published on

லாஸ் ஏஞ்சல்ஸ்,

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ‘ஜி’ பிரிவில் இன்று நடைபெற லீக் ஆட்டத்தில் ஈரான் மற்றும் நியூசிலாந்து அணிகள் லாஸ் ஏஞ்சல்ஸில் பலப்பரீட்சை நடத்தின. போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றது.

ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் எலிஜா ஜஸ்ட் கோல் அடித்து நியூசிலாந்தை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற செய்தார்.

ஈரானின் பதிலடி

ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்த ஈரான் அணி தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியது. தொடர்ந்து அழுத்தம் கொடுத்த அந்த அணிக்கு 32-வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. ராமின் ரெஸாயியன் அடித்த கோலின் மூலம் ஈரான் 1-1 என சமன் செய்தது. இதனால் முதல் பாதி சமநிலையுடன் நிறைவடைந்தது.

மீண்டும் முன்னிலை பெற்ற நியூசிலாந்து

இரண்டாவது பாதியிலும் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடின. ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் எலிஜா ஜஸ்ட் தனது இரண்டாவது கோலை பதிவு செய்து நியூசிலாந்தை மீண்டும் முன்னிலை பெற செய்தார். இதனால் நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

முகம்மது மொஹேபியின் பதில் கோல்

பின்னடைவை ஏற்க மறுத்த ஈரான் அணி தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதன் பலனாக 64-வது நிமிடத்தில் முகம்மது மொஹேபி கோல் அடித்து ஈரானை மீண்டும் சமநிலைக்கு கொண்டு வந்தார்.

இதனால் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.

டிராவில் முடிந்த விறுவிறுப்பான மோதல்

இறுதிக்கட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்கான கோலை தேடி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால் கிடைத்த வாய்ப்புகளை கோல்களாக மாற்ற முடியாததால், ஆட்ட நேர முடிவில் போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

‘ஜி’ பிரிவில் கடும் போட்டி

இந்த டிரா காரணமாக ‘ஜி’ பிரிவில் உள்ள அணிகள் அனைத்தும் தலா ஒரு புள்ளியுடன் சமநிலையில் உள்ளன. இதனால் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும் அணிகளை தீர்மானிக்கும் போட்டி மேலும் விறுவிறுப்பாக மாறியுள்ளது.

உலகக் கோப்பையின் ஆரம்ப கட்டத்திலேயே ‘ஜி’ பிரிவு மிகவும் போட்டி நிறைந்த பிரிவாக உருவெடுத்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com