

டல்லாஸ்,
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணி 'ஜெ' பிரிவில் இடம் வகிக்கிறது. அந்த அணி தனது தொடக்க ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியாவை பந்தாடியது. மூன்று கோல்களையும் அர்ஜென்டினா கேப்டன் 38 வயதான லயோனல் மெஸ்சி அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். மேலும் உலகக் கோப்பையில் அவரது ஒட்டு மொத்த கோல்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்ததுடன், உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவரான ஜெர்மனி முன்னாள் வீரர் மிரோஸ்லாவ் குளோசின் சாதனையை சமன் செய்தார்.
இந்த நிலையில் அர்ஜென்டினா அணி தனது 2-வது லீக்கில் ஆஸ்திரியாவை டல்லாஸ் நகரில் சந்திக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நாளை (திங்கட்கிழமை) இரவு 10.30 மணிக்கு நடக்கிறது. இதில் மெஸ்சி மேலும் ஒரு கோல் அடித்து குளோசின் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை நிகழ்த்துவாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.