

மியாமி,
23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று ‘எச்’ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் சவுதி அரேபியா மற்றும் உருகுவே அணிகள் மியாமியில் மோதின. போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், கோல் அடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
முதல் பாதி கோல் இன்றி முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 41-வது நிமிடத்தில் சவுதி அரேபியாவின் அப்துல்லேலா அல்-அம்ரி கோல் அடித்து அணியை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற செய்தார்.
பின்னடைவை சந்தித்த உருகுவே அணி இரண்டாம் பாதியில் ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்தது. தொடர்ந்து அழுத்தம் கொடுத்த அந்த அணிக்கு 80-வது நிமிடத்தில் சமநிலை கிடைத்தது. மாக்ஸி அரௌஜோ அடித்த கோலின் மூலம் உருகுவே 1-1 என சமன் செய்தது.
இறுதிக்கட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்கான கோலை தேடி தீவிரமாக முயற்சித்தன. ஆனால் கூடுதல் கோல் எதுவும் அடிக்க முடியாததால் ஆட்ட நேர முடிவில் சவுதி அரேபியா - உருகுவே ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
இந்த டிரா காரணமாக ‘எச்’ பிரிவில் உள்ள அணிகள் அனைத்தும் தலா ஒரு புள்ளியுடன் சமநிலையில் உள்ளன. இதனால் நாக்-அவுட் சுற்றுக்கான போட்டி மேலும் விறுவிறுப்பாகியுள்ளது.