

வாஷிங்டன்,
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து சாதனை படைத்துள்ளது.உலகையே உற்றுநோக்க வைத்த கால்பந்து உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நடைபெறுகிறது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறும் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. கால்பந்து உலகின் இரு பலம் வாய்ந்த அணிகளான அர்ஜென்டினாவும் ஸ்பெயினும் 60 ஆண்டுகளுக்கு பிறகு இந்த இரு அணிகளும் உலகக் கோப்பையில் நேருக்கு நேர் மோதுவதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
பிபா தரவரிசைப் பட்டியல் 1992-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, உலகத் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இரு அணிகள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறையாகும். பிபா தரவரிசையில் அர்ஜென்டினா முதலிடத்திலும், ஸ்பெயின் இரண்டாம் இடத்திலும் உள்ளன.
இந்நிலையில், இறுதிப் போட்டியை நேரில் காண்பதற்கான ஒரு டிக்கெட், இந்திய மதிப்பில் குறைந்தபட்சமாக 7 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. மைதானத்தில் இருக்கை இருக்கும் இடத்திற்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்படும் நிலையில், போட்டியை அருகில் இருந்து பார்க்க, 10 லட்சம் ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.
இருக்கைகள் மட்டும் உள்ள விவிஐபி பாக்ஸில் அமர்ந்து போட்டியை பார்க்க, தலா 27 லட்சம் ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டை விற்பனை செய்யும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம், அமெரிக்க மண்ணில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில், அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படும் போட்டி என்ற சாதனையும் படைக்கப்பட்டுள்ளது.