

ஹூஸ்டன்
6 உலகக்கோப்பை கால்பந்து தொடர்களில் கோல் அடித்து, மெஸ்சியை பின்னுக்கு தள்ளி ரொனால்டோ வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. இதில் ஹூஸ்டன் ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் போர்ச்சுகல் மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே நடந்த போட்டி பரபரப்பாக பார்க்கப்பட்டது.
ஏனெனில், போட்டியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அதிரடியாக விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதற்கேற்ப அவர் 2 கோல்கள் அடித்து, ஆட்ட நாயகன் விருதும் வென்றார். போட்டி தொடங்கிய 6 மற்றும் 39 ஆகிய நிமிடங்களில் இந்த கோல்கள் அடிக்கப்பட்டன. இதன் மூலம், மெஸ்சியின் முந்தைய சாதனையை ரொனால்டோ முறியடித்துள்ளார்.
2006, 2010, 2014, 2018, 2022, 2026 ஆகிய 6 உலகக்கோப்பை கால்பந்து தொடர்களில் பங்கேற்று, அவற்றில் கோல் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார். அவர் தவிர 6 முறை உலகக்கோப்பை கால்பந்து தொடர்களில் விளையாடிய வீரராக மெஸ்சி உள்ளார்.
மெஸ்சியும் இதுபோன்று 6 முறை கால்பந்து தொடர்களில் விளையாடியபோதும், ஒரு முறை (2010) அவர் கோல் எதுவும் அடிக்கவில்லை. அதனால், அந்த பெருமையை ரொனால்டோ தட்டி சென்றுள்ளார்.
இதேபோன்று, பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் (10) அடித்த போர்ச்சுகல் வீரர் என்ற பெருமையையும் ரொனால்டோ பெற்றுள்ளார். சக வீரரான யூஸ்பையோ (9) என்பவரை அவர் முந்தியுள்ளார்.