தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் - பூடானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா

10-வது முறையாகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் இறுதிப்போட்டிக்குத் தயாராகி வருகிறது.
இந்திய அணி
Published on: 

டாக்கா,

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதியில் பூடான் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலம் 10-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை இந்தியா தக்கவைத்துள்ளது.

முதல் பாதியில் 2 கோல்கள்

வங்காளதேசத்தின் டாக்கா நகரில் நடைபெற்ற இந்த அரையிறுதிப் போட்டியில் தொடக்கத்தில் இரு அணிகளும் சமபலத்துடன் விளையாடிநிலையில், இந்திய அணி படிப்படியாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.

ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் இந்தியாவின் விஷ்ணு பி.வி. முதல் கோலை அடித்தார். இதனால் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து 28-வது நிமிடத்தில் இந்திய கேப்டன் சிங்லென்சனா சிங் கோல் அடித்து இந்தியாவின் முன்னிலை 2-0 என உயர்த்தினார்.

இதனால் முதல் பாதி முடிவில் இந்திய அணி இரண்டு கோல்கள் முன்னிலை பெற்றிருந்தது.

ஆப்சைடு

இரண்டாவது பாதி தொடங்கியதும் பூடான் அணி தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியது. 48-வது நிமிடத்தில் அந்த அணியின் கின்சாங் தாஷி டோப்டன் கோல் அடித்தார்.

முதலில் அந்த கோல் ஆப்சைடு எனக் கூறி நடுவர் நிராகரித்தார். ஆனால், காணொலி உதவி நடுவர் (VAR) தொழில்நுட்பத்தில் ஆய்வு செய்த பிறகு கோல் செல்லும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ஆட்டம் 2-1 என மாறியது.

பெனால்டி ரத்து

இந்தப் போட்டியில் மற்றொரு திருப்பமாக இந்திய அணிக்கு வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பும் காணொலி உதவி நடுவர் (VAR)ஆய்வுக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டது. மாற்று வீரராகக் களமிறங்கிய இர்பான் யாத்வாட் அடித்த பந்து பூடான் வீரர் நிமா வாங்டியின் கையில் பட்டதாகக் கூறி நடுவர் பெனால்டி வழங்கினார். ஆனால், காணொலி ஆய்வுக்குப் பிறகு அந்த முடிவை மாற்றினார்.

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் வரலாற்றில் காணொலி உதவி நடுவர் (VAR) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட முதல் போட்டி இதுவாகும்.

ஆட்டத்தின் கடைசி நிமிடங்களிலும் பூடான் அணி சமன் செய்ய தீவிரமாக முயன்றது. இருப்பினும், இந்திய வீரர்கள் தற்காப்பில் சிறப்பாக செயல்பட்டு முன்னிலையை தக்கவைத்தனர். இதன் மூலம் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப்போட்டியில் யாருடன் மோதல்?

மற்றொரு அரையிறுதியில் மோதும் வங்காளதேசம் - பாகிஸ்தான் அணிகளில் வெற்றி பெறும் அணியை இந்தியா இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளும்.

நடப்பு சாம்பியனான இந்திய அணி இதுவரை 9 முறை சாப் கோப்பையை வென்றுள்ளது. தற்போது 10-வது முறையாகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் இறுதிப்போட்டிக்குத் தயாராகி வருகிறது.

X