இந்திய கால்பந்து வளர்ச்சி பாதிப்பு: 15 முன்னாள் வீரர்கள் மத்திய மந்திரிக்கு கடிதம்

கால்பந்து போட்டிகளின் வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
இந்திய கால்பந்து வளர்ச்சி பாதிப்பு: 15 முன்னாள் வீரர்கள் மத்திய மந்திரிக்கு கடிதம்
Published on: 

அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (AIFF) தற்போதைய நிர்வாகத்தின் செயல்பாடுகளால் இந்திய கால்பந்தின் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி, முன்னாள் கேப்டன் பெய்சூங் பூட்டியா உள்ளிட்ட இந்திய அணியின் 15 முன்னாள் கால்பந்து வீரர்கள் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மத்திய விளையாட்டு அமைச்சகம்

அந்தக் கடிதத்தில், இந்திய கால்பந்தை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுவர மத்திய விளையாட்டு அமைச்சகம் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும், கால்பந்து நிர்வாகத்தை வழிநடத்துவதற்குச் சிறந்த நிர்வாக அனுபவமும் சாதனைப் பதிவும் கொண்ட ஒருவரை புதிய தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த 2022-ம் ஆண்டு அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக கல்யாண் சௌபே பொறுப்பேற்றபோது இந்திய அணி FIFA தரவரிசையில் 95-வது இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது 138-வது இடத்திற்குச் சரிந்துள்ளதாக முன்னாள் வீரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்திய கால்பந்தின் சர்வதேச மதிப்பு குறைந்து வருவதற்கு தற்போதைய நிர்வாகத்தின் செயல்பாடுகளும் காரணம் என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், பிரேசில், உருகுவே உள்ளிட்ட நாடுகளுடன் நட்புறவு போட்டிகளை நடத்துவதற்கு அதிக அளவில் பணம் செலவிடப்பட்டதாகவும், அந்தத் தொகையை இந்தியாவில் கால்பந்து கட்டமைப்பை மேம்படுத்தவும், இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இந்தியன் சூப்பர் லீக் (ISL) போட்டிகள் நடத்துவதில் ஏற்பட்ட தாமதம், கால்பந்து கிளப்புகளின் நிதி நெருக்கடி, வீரர்களின் வேலைவாய்ப்பு பாதிப்பு போன்ற பிரச்சினைகளையும் அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக, இந்திய கால்பந்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முறையான திட்டமிடல், வீரர்களுக்குத் தரமான பயிற்சி, உள்நாட்டு கால்பந்து போட்டிகளின் வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். தற்போதைய நிர்வாகத்தின் செயல்பாடுகள் தொடர்ந்தால் இந்திய கால்பந்தை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுவர பல ஆண்டுகள் ஆகும் என்றும் எச்சரித்துள்ளனர்.

X