

புவனேஸ்வர்,
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் ஒடிசா எப்சி - நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி அணிகளுக்கு இடையிலான போட்டி கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்தது. கடைசி நேரத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி தவறவிட்டதால், வெற்றி பெறும் வாய்ப்பு கைநழுவியது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஒடிசா எப்சி - நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் 5-வது நிமிடத்தில் ஜித்தின் எம்.எஸ். அளித்த பந்தைப் பெற்ற நிக்கோலா நின்கோவிச் கோல் அடிக்க முயன்றார். ஆனால், ஒடிசா அணியின் கோல்கீப்பர் ரித்திக் திவாரி அதைத் தடுத்து நிறுத்தினார்.
தொடர்ந்து அஜராயி மேற்கொண்ட மற்றொரு கோல் முயற்சியையும் ரித்திக் திவாரி முறியடித்தார். மறுபுறம் ஒடிசா அணியும் கோல் அடிக்க கடுமையாக தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருப்பினும், முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.
இரண்டாவது பாதியில் கோல் அடிக்கும் நோக்கில் இரு அணிகளும் மாற்று வீரர்களை களமிறக்கின. ஒடிசா அணியில் நந்தகுமார் சேகர், ரஹீம் அலி உள்ளிட்டோர் களமிறங்கினர். நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியில் பார்த்திப் கோகோய், எத்தியான் கோன்சாலஸ், ரெடீம் திலாங் ஆகியோர் களமிறக்கப்பட்டனர்.
இருப்பினும் எந்த பயனும் இரு அணிகளுக்கும் கிடைக்கவில்லை. அப்போது ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது வீணானதால் ஆட்டம் கோலின்றி முடிந்தது.
இந்த டிராவின் மூலம் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி 3 போட்டிகளில் 7 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. ஒடிசா எப்சி அணி 3 போட்டிகளில் 2 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது.
வெற்றிக்கான வாய்ப்பு கடைசி நேரத்தில் கிடைத்தும் அதை பயன்படுத்த முடியாததால் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி ஏமாற்றத்துடன் ஒரு புள்ளியைப் பெற்றது.