

ரோம்
16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி 11 நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் 16 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.
யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியில், குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ரஷியா மற்றும் பின்லாந்து ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், 45வது நிமிடத்தில் ரஷிய வீரர் அலெக்ஸி மிரன்சுக் முதலாவது கோல் அடித்தார். அதன்பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால், ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் பின்லாந்து அணியை வீழ்த்தி ரஷியா அணி வெற்றிபெற்றது.
மற்றொரு ஆட்டத்தில், குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள துருக்கி அணியும், வேல்ஸ் அணியும் மோதின. துருக்கி அணி வீரர்கள் கோல் எதுவும் அடிக்காத நிலையில், வேல்ஸ் அணியின் ஆரோன் ராம்சே மற்றும் கன்னார் ராபர்ட்ஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால், இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணி வெற்றி பெற்றது.
மூன்றாவது ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி அணிகள் மோதின. ஆட்டத்தின் 26 மற்றும் 52வது நிமிடங்களில் இத்தாலி வீரர் மானுவேல் லோகடெல்லி இரண்டு கோல்களை அடித்து அசத்தினார். ஆட்டத்தின் இறுதியில் சிரோ இம்மோபைல் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் 3க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை, இத்தாலி அணி எளிதாக வீழ்த்தியது.
புதன்கிழமை பிற்பகுதியில் சுவிட்சர்லாந்தை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றதன்மூலம் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி யில் நாக் அவுடுக்குள் நுழைந்த முதல் அணியாக இத்தாலி உள்ளது
இத்தாலி அணியின் வெற்றியை தொடர்ந்து இத்தாலிய நடிகை சப்ரினா பெரிலி நீச்சல் உடையில் தோன்றி ரசிகர்களை பார்த்து கொடியசைத்தார்.
இத்தாலி ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பை வென்றால், நடிகை சப்ரினா பெரிலி நிர்வாணமாக தோன்றுவதாக உறுதி அளித்து உள்ளதாக இத்தாலி கால்பந்து சாம்பவான் பிரான்செஸ்கோ டோட்டி கூறி உள்ளார்.