

மாட்ரிட்,
ஸ்பெயினில் புகழ்பெற்ற லா லிகா கால்பந்து லீக் போட்டி நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள 20 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.
இந்த போட்டி தொடரில் நேற்று முன்தினம் மாட்ரிட்டில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ரியல் மாட்ரிட்-செவில்லா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி 4-1 என்ற கோல் கணக்கில் செவில்லா அணியை வீழ்த்தி 27-வது வெற்றியை ருசித்தது. ரியல் மாட்ரிட் அணி தரப்பில் நாசோ 10-வது நிமிடத்திலும், கிறிஸ்டியானோ ரொனால்டோ 23-வது மற்றும் 78-வது நிமிடத்திலும், டோனி ரூஸ் 84-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். செவில்லா அணி தரப்பில் ஜோவ்டிச் 49-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார். இந்த ஆட்டத்தில் முதல் கோல் அடித்ததன் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ பல்வேறு லீக் போட்டிகளில் ரியல் மாட்ரிட் அணிக்காக 400 கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
மற்றொரு லீக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி 4-1 என்ற கோல் கணக்கில் லாஸ் பால்மாஸ் அணியை தோற்கடித்தது. பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்தினார்.
பார்சிலோனா அணி 37 ஆட்டங்களில் ஆடி 27 வெற்றி, 6 டிரா, 4 தோல்வியுடன் 87 புள்ளியும், ரியல் மாட்ரிட் அணி 36 ஆட்டத்தில் விளையாடி 27 வெற்றி, 6 டிரா, 3 தோல்வியுடன் 87 புள்ளியும் பெற்றுள்ளன. அட்லெடிகோ மாட்ரிட் அணி 37 ஆட்டத்தில் ஆடி 22 வெற்றி, 9 டிரா, 6 தோல்வியுடன் 75 புள்ளிகள் பெற்றுள்ளது.
சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? என்பதில் ரியல் மாட்ரிட், பார்சிலோனா அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ரியல் மாட்ரிட் அணிக்கு இன்னும் 2 லீக் ஆட்டம் எஞ்சி இருக்கிறது. பார்சிலோனா அணிக்கு ஒரு ஆட்டம் மட்டுமே உள்ளது.