கோல் அடி பாப்போம்... ஸ்பெயின் அணியை மிரள வைத்த கேப் வேர்டேவின் 40 வயது கோல் கீப்பர்

40 வயதான கோல் கீப்பர் வோசின்யா ஸ்பெயின் அணியின் 7 கோல் வாய்ப்புகளை தடுத்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
கோல் அடி பாப்போம்... ஸ்பெயின் அணியை மிரள வைத்த கேப் வேர்டேவின் 40 வயது கோல் கீப்பர்
Published on

அட்லாண்டா,

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அட்லாண்டாவில் நேற்று நடைபெற்ற ‘எச்’ பிரிவு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் மற்றும் அறிமுக அணியான கேப் வெர்டே அணிகள் மோதின. போட்டிக்கு முன் ஸ்பெயின் எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேப் வெர்டே வீரர்கள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஸ்பெயின் தாக்குதல்... வோசின்யா தடுப்பு

போட்டி முழுவதும் பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஸ்பெயின் அணி தொடர்ந்து கோல் வாய்ப்புகளை உருவாக்கியது. முதல் பாதியிலேயே பெட்ரி உள்ளிட்ட வீரர்கள் அடித்த 4 ஷாட்டுகளை கேப் வெர்டே கோல் கீப்பர் வோசின்யா அபாரமாக தடுத்தார். தொடர்ந்து ஸ்பெயின் வீரர்கள் தாக்குதலை தீவிரப்படுத்தினார்கள். ஆனால் கேப் வெர்டேவின் தடுப்பு அரணை உடைக்க முடியவில்லை.

லாமின் யமாலும் பலனளிக்கவில்லை

71-வது நிமிடத்தில் போட்டியின் போக்கை மாற்றும் நோக்கில் ஸ்பெயின் பயிற்சியாளர் இளம் நட்சத்திரமான லமின் யமாலை களமிறக்கினார். இருப்பினும் அவராலும் கேப் வெர்டேவின் தடுப்பு அரணை உடைத்து கோல் அடிக்க முடியவில்லை.

7 கோல் வாய்ப்புகளை தடுத்த 40 வயது ஹீரோ

40 வயதான கோல் கீப்பர் வோசின்யா போட்டி முழுவதும் ஸ்பெயின் அணியின் 7 கோல் வாய்ப்புகளை தடுத்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அவரது அபாரமான சேவ்களால் ஸ்பெயின் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போனது. இதன் காரணமாக போட்டி 0-0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. மேலும், நடப்பு உலகக் கோப்பை தொடரில் கோல் எதுவும் அடிக்கப்படாத முதல் போட்டியாகவும் இது பதிவானது.

5 லட்சம் மக்கள் தொகை கொண்ட தீவு நாட்டின் பெருமை

அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள கேப் வெர்டே சுமார் 5 லட்சம் மக்கள் தொகை கொண்ட சிறிய தீவு நாடாகும். உலகக் கோப்பை அரங்கில் தனது முதல் போட்டியிலேயே பலம் வாய்ந்த ஸ்பெயினை கோல் இன்றி தடுத்து ஒரு புள்ளியை கைப்பற்றியது அந்த நாட்டிற்கு வெற்றிக்கு இணையான சாதனையாக பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com