

மெக்சிகோ சிட்டி,
அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தி வரும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் புதிய உலக சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
கடந்த 11-ந்தேதி தொடங்கிய இந்த உலகக் கோப்பை தொடரில் 48 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இதுவரை நடைபெற்றுள்ள 60 போட்டிகளில் மொத்தம் 177 கோல்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் பதிவான தொடராக நடப்பு சீசன் புதிய சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்பு, 2022-ம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பையில் 64 போட்டிகளில் மொத்தம் 172 கோல்கள் மட்டுமே அடிக்கப்பட்டிருந்தது. இந்த முறை 48 அணிகள் பங்கேற்பதால், மொத்தம் 104 போட்டிகள் நடைபெற உள்ளன. எனவே, உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக மொத்த கோல்கள் 250-ஐ தாண்டும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கோல் சாதனையைத் தொடர்ந்து ரசிகர்கள் வருகையிலும் புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. 1994-ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பையை 35 லட்சத்து 87 ஆயிரத்து 538 ரசிகர்கள் நேரில் கண்டு ரசித்ததே இதுவரை அதிகபட்சமாக இருந்தது. ஆனால், நடப்பு உலகக் கோப்பையில் ஐவரிகோஸ்ட் - கியூராசாவ் இடையிலான போட்டி வரை மைதானங்களுக்கு வந்த ரசிகர்களின் எண்ணிக்கை 36 லட்சத்து 5 ஆயிரத்து 357 ஆக உயர்ந்து, அந்த சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது.