

வாஷிங்டன்,
உலகில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு தொடராக உலகக்கோப்பை கால்பந்து தொடர் திகழ்கிறது. அந்த வகையில் 23வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கியது. மெக்சிகோ, கனடா, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது.
12 பிரிவுகளில் தலா 4 அணிகள் வீதம் மொத்தம் 48 அணிகள் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றுகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் - 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3வது இடத்தை பிடிக்கும் சிறந்த 8 அணிகள் என மொத்தம் 32 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில், உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற 11வது லீக் ஆட்டத்தில் குரூப் எப் பிரிவில் இடம்பெற்றுள்ள நெதர்லாந்து , ஜப்பான் அணிகள் மோதின.
பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்டத்தின் 2வது பாதியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முனைப்பு காட்டினர்.
அதன்படி ஆட்டத்தின் 2வது பாதியில் இரு அணிகளும் கோல்களை பறக்க விட்டன. ஆட்டத்தின் 50வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் வெர்ஜில் வென் டிஜக் கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் கைய்டொ நாக்முரா கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என்ற புள்ளியில் சமநிலையில் இருந்தது.
இதையடுத்து, ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் கிரைசென்சியொ சம்மர்வெலி கோல் அடித்தார். இதனால், 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து முன்னிலை பெற்றது. இதனை தொடர்ந்து ஆட்டத்தின் இறுதிகட்டத்தில் 88வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் டைசி கமடா கோல் அடித்தார். இதனால் 2-2 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலை பெற்றது.
90 நிமிடங்கள் நிறைவடைந்த நிலையில் கூடுதலாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அப்போதும், இரு அணிகளும் கோல் அடிக்க முற்பட்டன. ஆனால், கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டத்தின் இறுதியில் 2-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து , ஜப்பான் ஆட்டம் டிராவில் முடிந்தது. இப்போட்டி டிரா ஆனதால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.