

புவெனஸ் அயர்ஸ்,
அர்ஜென்டினா தேசிய அணிக்காக தனது கடைசி போட்டியில் விளையாடியப் பின் மெஸ்ஸி உணர்ச்சிவசப்பட்டு பேசினார். தேசிய அணிக்காக விளையாடிய 20 ஆண்டுகால பயணத்தை நினைவுகூர்ந்த மெஸ்ஸி, அர்ஜென்டினாவை பிரதிநிதித்துவப்படுத்தியதே தனது வாழ்க்கையின் மிக அழகான அனுபவம் என்று தெரிவித்துள்ளார்.
புவெனஸ் அயர்ஸில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா - பெனின் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெனற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி ஒரு கோல் அடித்ததுடன், 2 கோல் உதவிகளையும் வழங்கினார். இதன் மூலம் தேசிய அணியுடனான தனது நீண்ட பயணத்தை உணர்ச்சிகரமான தருணத்துடன் நிறைவு செய்தார்.
ஆட்டத்துக்குப் பிறகு மெஸ்ஸி பேசுகையில்,
“இந்த ஜெர்சிக்கு நன்றி சொல்வதைத் தவிர வேறு எதுவும் என்னிடம் இல்லை. கடந்த 20 ஆண்டுகளாக மிகவும் மோசமான தருணங்களிலும் நான் போராடுவதையும், முன்னோக்கிச் செல்வதையும், என்னிடம் இருந்த அனைத்தையும் கொடுப்பதையும் நிறுத்தவில்லை.
இனி இங்கு வராமல் இருப்பதும், அர்ஜென்டினா தேசிய அணியுடன் இல்லாமல் இருப்பதும் எனக்கு மிகுந்த வலியைத் தரும். என்னால் முடிந்திருந்தால், என் வாழ்நாள் முழுவதையும் இங்கேயே கழிக்க விரும்புவேன். ஏனெனில் அர்ஜென்டினாவுக்காக விளையாடுவதை விட அழகானது எதுவுமில்லை.” என்று உருக்கமாக தெரிவித்தார்.
மேலும், இந்த தருணம் முடிந்துவிடக் கூடாது என்பதற்காகவே தான் வழக்கத்தைவிட அதிகமாக பேசுவதாகவும் மெஸ்ஸி குறிப்பிட்டார்.