

புடாபெஸ்ட்,
யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் ஆர்சனல் அணி, நடப்பு சாம்பியன் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணியிடம் பெனால்டி ஷூட் அவுட்டில் தோல்வியடைந்தது.
புடாபெஸ்டில் நடைபெற்ற இந்த போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. ஆர்சனல் தரப்பில் கை ஹாவெர்ட்ஸ் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். அதற்கு பதிலடியாக பிஎஸ்ஜியின் உஸ்மானே டெம்பேலே கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்கள், கூடுதல் 30 நிமிடங்களின் முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன.
இதையடுத்து சாம்பியனை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் நடத்தப்பட்டது. இதில் ஆர்சனல் அணியின் எபெரெச்சி எஸே மற்றும் கேப்ரியல் மகலாய்ஸ் ஆகியோர் தங்களது வாய்ப்புகளை கோலாக மாற்ற தவறினர். மறுபுறம், பிஎஸ்ஜி வீரர்கள் தங்களது வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தினர்.
இதன் மூலம் பெனால்டி சுற்றில் வெற்றி பெற்ற பிஎஸ்ஜி அணி, யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டது. அதே நேரத்தில், கோப்பையை கைப்பற்றும் கனவுடன் களமிறங்கிய ஆர்சனல் அணி கடைசி கட்டத்தில் தோல்வியை சந்தித்து ஏமாற்றத்துடன் வெளியேறியது.