

மாட்ரிட்,
91-வது லா லிகா கிளப் கால்பந்து தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. 20 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டம் ஒன்றில் ரியல் மாட்ரிட் அணி 4-0 என்ற கோல் கணக்கில் எஸ்பான்யோல் கிளப்பை தோற்கடித்தது. ரோட்ரிகோ 2 கோலும், மார்கோ அசென்சியோ, கரிமா பெஞ்சிமா தலா ஒரு கோலும் அடித்தனர்.
இன்னும் 4 லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் கோப்பையை 35-வது முறையாக கைப்பற்றியது. இதுவரை 34 ஆட்டங்களில் ஆடியுள்ள ரியல்மாட்ரிட் 25 வெற்றி, 6 டிரா, 3 தோல்வி என்று 81 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. செவில்லா 64 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பார்சிலோனா 63 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.
லா லிகா போட்டி வரலாற்றில் அதிக முறை பட்டம் வென்ற அணிகளின் பட்டியலில் ரியல் மாட்ரிட் (35 பட்டம்) முதலிடத்தில் நீடிக்கிறது. பார்சிலோனா கிளப் 26 பட்டங்கள் வென்று அடுத்த இடத்தில் இருக்கிறது.