

மாலே,
8-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் (20 வயதுக்குட்பட்டோர்) போட்டி மாலத்தீவுவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 7 அணிகள் பங்கேற்றுள்ளன. 'ஏ' பிரிவில் நேபாளம், இலங்கை, மாலத்தீவு, பூட்டான் அணிகளும், 'பி' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இதில் 4 முறை சாம்பியனான இந்திய அணி நேற்று நடந்த தனது முதலாவது ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர் கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை பந்தாடியது. இந்திய வீரர்கள் விஷால் யாதவ் (3-வது நிமிடம்), ஓமாங் டோடும் (64 மற்றும் 88-வது நிமி டம்) கோலடித்தனர். கடைசி வரை போராடியும் பாகிஸ்தான் அணியினரால் இந்திய தடுப்பு அரணை தகர்க்க முடியவில்லை.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரைஇறுதியை உறுதி செய்தது. 2-வது தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து இருந்த வங்காளதேச அணியும் அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.
நாளை நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, வங்காளதேசத்தை (மாலை 4.15 மணி) எதிர்கொள்கிறது.