இன்று தொடங்குகிறது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா.. வித்தைய காட்ட தயாராகும் மெஸ்சி, ரொனால்டோ, எம்பாப்பே

உலகக் கோப்பை கால்பந்தின் முதல் ஆட்டத்தில் மெக்சிகோ- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
இன்று தொடங்குகிறது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா.. வித்தைய காட்ட தயாராகும் மெஸ்சி, ரொனால்டோ, எம்பாப்பே
Published on

மெக்சிகோ சிட்டி,

கால்பந்து விளையாட்டின் சிகரமான உலகக்கோப்பை கால்பந்து 1930-ல் இருந்து 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இடையில், உலக போர் காரணமாக 2 முறை தொடர முடியவில்லை. இதுவரை 22 உலகக்கோப்பை தொடர்கள் நடந்துள்ளன. கடைசியாக 2022-ம் ஆண்டு கத்தாரில் அரங்கேறிய உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணி பிரான்சை வீழ்த்தி மகுடம் சூடியது.

உலகக் கோப்பை கால்பந்து

இந்த நிலையில் 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி மெக்சிகோ சிட்டியில் இன்று (வியாழக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. அமெரிக்கா, மெக்சிகோ, கனடா இணைந்து நடத்தும் இந்த போட்டியில் 48 அணிகள் பங்கேற்கின்றன. அதிக அணிகள் களம் காணும் உலக போட்டி இது தான். அவை 12 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

மெட்லைப் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகளும், 3-வது இடத்தை பெறும் சிறந்த 8 அணிகளும் என 32 அணிகள் 2-வது சுற்றுக்கு (நாக்-அவுட்) முன்னேறும். அதில் இருந்து 16 அணிகள் 3-வது சுற்றை (ரவுண்ட் 16) எட்டும். தொடர்ந்து கால்இறுதி, அரைஇறுதி என யுத்தம் நீண்டு, கடைசியில் ஜூலை 19-ந்தேதி நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி நடைபெறும்.

மெஸ்சி- எம்பாப்பே-கிறிஸ்டியானோ ரொனால்டோ

'நம்பர் ஒன்' அணியான பிரான்ஸ், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, 2-ம் நிலை அணியான ஸ்பெயின், இங்கிலாந்து, போர்ச்சுகல் உள்ளிட்ட அணிகள் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பில் முன்னணியில் உள்ளன. உலகக் கோப்பையை அதிக முறை வென்ற பெருமைக்குரிய பிரேசில் அணி (5 முறை) மீண்டும் எழுச்சி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதே நேரத்தில் 4 முறை சாம்பியனான இத்தாலி தொடர்ந்து 3-வது முறையாக உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போதுமே குறிப்பிட்ட வீரர்கள் உலக கால்பந்து அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். அந்த வகையில் இந்த சீசனில் கிலியன் எம்பாப்பே, டெம்பிளே (பிரான்ஸ்), யாமின்யமால் (ஸ்பெயின்), லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), கிறிஸ்டியானோ ரொனால்டோ, விட்டின்யா (போர்ச்சுகல்), ஹாரி கேன், ஜூட்

பெல்லிங்ஹாம் (இங்கிலாந்து), வினிசியஸ் ஜூனியர், நெய்மார் (பிரேசில்), எர்லிங்ஹாலன்ட் (நார்வே) உள்ளிட்ட நட்சத்திர வீரர்களின் கால்கள் காட்டும் வித்தையை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

தொடக்க ஆட்டம்

முதல் நாளில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. மெக்சிகோ சிட்டியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் (உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணி, இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணி) போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான மெக்சிகோவும், தென்ஆப்பிரிக்காவும் (ஏ பிரிவு) கோதாவில் குதிக்கின்றன.

உலக தரவரிசையில் 15-வது இடம் வகிக்கும் மெக்சிகோ உள்ளூர் ரசிகர்களுக்கு மத்தியில் வெற்றியோடு தொடங்க தீவிர முனைப்பு காட்டுகிறது. அந்த அணியில் ரால் ஜிமினெஸ், கில்பெர்ட்டோ மோரா, ஒபெட் வர் காஸ், கோல் கீப்பர் குல்லர்மோ ஒச்சாவ் போன்ற சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள்.

தரவரிசையில் 60-வது இடம் வகிக்கும் ரோன்வென் வில்லியம்ஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா 4-வது முறையாக உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஆனால் அந்த அணி இதுவரை லீக் சுற்றை தாண்டியதில்லை. எனவே நாக்-அவுட் சுற்றை எட்டுவதற்கு இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டியது முக்கியம். குறைந்தது டிராவது செய்ய வேண்டும். இவ்விரு அணிகள் சர்வதேச போட்டியில் 4 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 2-ல் மெக்சிகோவும், ஒன்றில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டம் 'டிரா' ஆனது.

தென்கொரியா- செக்குடியரசு

இதே பிரிவில் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு (இந்திய நேரப்படி மறுநாள் காலை 7.30 மணி) நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் தென்கொரியா- செக்குடியரசு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com