உஸ்பெகிஸ்தானிடம் வீழ்ந்த இந்தியா... யு20 ஆசிய கோப்பைக்கு தகுதி பெறுமா?

யு-20 ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றுப் போட்டிகள் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை நடைபெறுகின்றன.
கால்பந்து
Published on

தாஷ்கண்ட்,

யு20 ஆசியக் கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றுப் போட்டியின் 2-வது ஆட்டத்தில் இந்திய ஆண்கள் அணி, உஸ்பெகிஸ்தானிடம் 0-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

இந்தியா - உஸ்பெகிஸ்தான்

2027-ம் ஆண்டுக்கான யு-20 ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றுப் போட்டிகள் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை நடைபெறுகின்றன. அதன்படி,நேற்று தாஷ்கண்டில் உள்ள தோஸ்ட்லிக் மைதானத்தில் நடைபெற்ற ‘பி’ பிரிவு ஆட்டத்தில் இந்திய அணி, உஸ்பெகிஸ்தானை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தான் கையே ஓங்கி இருந்தது. 29-வது நிமிடத்தில் உஸ்பெகிஸ்தான் வீரர் உலுஜ்பெக் மாரடோவ் முதல் கோலை அடித்தார். தொடர்ந்து, 34-வது நிமிடத்தில் குவோன்ச்பெக் அப்ராவேவ் ‘பிரீ-கிக்’ மூலம் 2-வது கோலை பதிவு செய்தார். இதன் மூலம் முதல் பாதியில் 0-2 என இந்தியா பின் தங்கியது.

4 கோல்கள்

2-வது பாதியிலும் உஸ்பெகிஸ்தான் அணியே ஆதிக்கம் செலுத்தியது. அதன்படி, 67-வது நிமிடத்தில் ஷோராஹிம் ஷோராஹ்மேடோவ் 3-வது கோலை அடித்தார். தொடர்ந்து, ஆட்டத்தின் 90-வது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கிய நுர்பெக் செர்சென்பேவ் 4-வது கோலை பதிவு செய்தார்.

இந்திய அணி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டபோதிலும், உஸ்பெகிஸ்தான் அணியின் தடுப்பாட்டத்தை உடைத்து கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இந்தியா 0-4 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது.

2-வது இடம்

தோல்வியடைந்தபோதிலும், முதல் ஆட்டத்தில் சிரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்ததால், ‘ஹெட்-டு-ஹெட்’ விதியின் அடிப்படையில் ‘பி’ பிரிவில் இந்திய அணி தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது.

கடைசி ஆட்டம்

தனது கடைசி ஆட்டத்தில் இந்திய அணி வருகிற 6-ந்தேதி வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுவதுடன், உஸ்பெகிஸ்தான் அணி சிரியாவை வீழ்த்த வேண்டும். அப்படி நடந்தால் இந்தியா ‘பி’ பிரிவில் 2-வது இடத்தைப் பிடிக்கும். இதன் மூலம் 8 பிரிவுகளில் இருந்து தேர்வு செய்யப்படும் சிறந்த 7 இரண்டாவது இடம் பிடித்த அணிகளில் ஒன்றாக இந்தியா தகுதி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com