அமெரிக்கா அனுமதி மறுப்பு: சோமாலிய நடுவருக்கு முழு சம்பளமும் வழங்கப்படும் - பிபா உறுதி

சோமாலியா நடுவர் உலகக்கோப்பையில் பங்கேற்க முடியாமல் போனது பல்வேறு விவாதத்தை கிளப்பியது.
அமெரிக்கா அனுமதி மறுப்பு: சோமாலிய நடுவருக்கு முழு சம்பளமும் வழங்கப்படும் - பிபா உறுதி
Published on

வாஷிங்டன்,

சோமாலியா நடுவர்

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நாளை (வியாழக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. அமெரிக்கா, மெக்சிகோ, கனடா இணைந்து நடத்தும் இந்த போட்டியில் 48 அணிகள் பங்கேற்கின்றன.

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட 52 போட்டி நடுவர்களில் ஓமர் ஆர்டனும் (சோமாலியா) ஒருவர். 2025-ம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் சிறந்த நடுவருக்கான விருதை பெற்றார். சோமாலியா நாட்டில் இருந்து உலகக் கோப்பையில் பணியாற்றப்போகும் முதல் நடுவர் என்ற பெருமையை பெறும் கனவோடு அவர் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்து அமெரிக்காவின் மியாமி விமான நிலையத்துக்கு சென்றடைந்தார்.

அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு

அவரிடம் முறையான விசா மற்றும் பயண ஆவணங்கள் இருந்த போதிலும், அமெரிக்க குடியுரிமை மற்றும் எல்லை பாதுகாப்பு படையினரின் கூடுதல் பரிசோதனைக்கு பிறகு அவருக்கு அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதுடன், துருக்கிக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். சோமாலியா நாட்டினர் வருவதற்கு அமெரிக்கா நிறைய பயணக்கட்டுப்பாடுகளை விதித்திருப்பதும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. சர்வதேச கால்பந்து சம்மேளனமும் போட்டியை நடத்தும் நாட்டின் விசா நடை முறை மற்றும் குடியுரிமையில் தலையிட முடியாது என்று கூறிவிட்டது.

சொந்த நாட்டில் உற்சாக வரவேற்பு

அமெரிக்காவிலிருந்து தனது சொந்த நாடான சோமாலியா திரும்பிய ஒமருக்கு தலைநகர் மொகடிஷு விமான நிலையத்தில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அமோக வரவேற்புக்குப் பின்னர் அவர் பொதுமக்கள் மத்தியில் பேசும்போது, "இறைவன் அருள் இருந்தால், அடுத்த உலகக்கோப்பைக்கு நான் நிச்சயம் வருவேன் என உங்களுக்கு உறுதியளிக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

வாய்ப்பு பறிபோனாலும் சம்பளம் உறுதி

இந்த நிலையில், நடப்பு உலகக்கோப்பை தொடரில் நடுவராக செயல்பட முடியாமல் போனாலும், உமருக்கு பிபா கைகொடுத்துள்ளது. அவரது திறமையையும் அர்ப்பணிப்பையும் மதிக்கும் வகையில், அவர் போட்டியில் கலந்துகொள்ளாவிட்டாலும், அவருக்கு வழங்கப்பட வேண்டிய முழுத் தொகையையும் வழங்குவதாக பிபா உறுதியளித்துள்ளது. அத்துடன், ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள UEFA சூப்பர் கோப்பை போட்டிக்கு நடுவராக உமர் அதான் நியமனம் செய்வதாக பிபா அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com