

நியூயார்க்,
பிபா உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய சாதனையை 2026 உலகக் கோப்பையில் ஆஸ்திரியா அணி படைக்க உள்ளது. உலகக் கோப்பையின் 96 ஆண்டுகால வரலாற்றிலேயே மிக உயரமான வீரரைக் கொண்ட அணியாக ஆஸ்திரியா களமிறங்க உள்ளது.
செக் குடியரசின் முன்னணி கிளப்பான விக்டோரியா பிள்சென் அணிக்காக விளையாடும் ஆஸ்திரிய கோல்கீப்பர் புளோரியன் வீகல் இந்த சாதனை படைக்க உள்ளார். அவர் 2.05 மீட்டர் (6 அடி 9.5 அங்குலம்) உயரம் கொண்டவர்.
இதற்கு முன்பு உலகக் கோப்பை வரலாற்றில் மிக உயரமான வீரராக ஆண்ட்ரீஸ் நோப்பர்ட் இருந்தார். அவர் 2022 கத்தார் உலகக் கோப்பையில் 2.03 மீட்டர் உயரத்துடன் விளையாடியிருந்தார். தற்போது வீகல், நாப்பர்ட்டை விட உயரமாக இருப்பதால் புதிய சாதனை படைக்க உள்ளார்.
வீகல் இதுவரை சர்வதேச அளவில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். கடந்த மார்ச் மாதம் கானா அணிக்கு எதிரான நட்புறவு போட்டியில் அவர் ஆஸ்திரியாவுக்காக அறிமுகமானார். தற்போது ஆஸ்திரிய அணியில் அலெக்சாண்டர் ஷ்லாகர் மற்றும் பேட்ரிக் பென்ட்ஸ் ஆகியோருக்கு பின்னர் மூன்றாவது கோல்கீப்பராக உள்ளார்.
48 அணிகளுடன் நடைபெறும் 2026 உலகக் கோப்பையில் ஆஸ்திரியா, 'குரூப் ஜே' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா, அல்ஜீரியா மற்றும் ஜோர்டான் அணிகளும் இடம்பெற்றுள்ளன.
2026 பிபா உலகக் கோப்பை தொடர் நாளை முதல் ஜூலை 19 வரை நடைபெறுகிறது. வரலாற்றில் முதல் முறையாக மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் இந்த தொடர், அமெரிக்காவில் 11 நகரங்கள், மெக்சிகோவில் 3 நகரங்கள் மற்றும் கனடாவில் 2 நகரங்கள் என மொத்தம் 16 நகரங்களில் நடைபெற உள்ளது.