உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? அர்ஜென்டினா-இங்கிலாந்து மோதல்

2-வது அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா, இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? அர்ஜென்டினா-இங்கிலாந்து மோதல்
Published on

வாஷிங்டன்,

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழா 'கிளைமாக்சை' நெருங்கி விட்டது.

இதில் இந்திய நேரப்படி அட்லாண்டாவில் இன்று (புதன்கிழமை) நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா, இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

1978, 1986, 2022-ம் ஆண்டு சாம்பியனான அர்ஜென்டினா அணி லீக் சுற்றில் அல்ஜீரியா (3-0), ஆஸ்திரியா (2-0), ஜோர்டான் (3-1) அணிகளை எளிதில் வீழ்த்தி தனது பிரிவில் முதலிடம் பிடித்தது. ஆனால் அதன் பிறகு அந்த அணியின் பயணம் சற்று தடுமாற்றம் நிறைந்ததாகவே இருந்தது. 2-வது சுற்றில் கேப்வெர்டேவை கூடுதல் நேரத்தில் போராடி (3-2) வென்றது. 3-வது சுற்றில் எகிப்து அணிக்கு எதிராக 79 நிமிடங்கள் வரை 2 கோல் பின்தங்கி இருந்து கடைசி 11 நிமிடங்களில் அடுத்தடுத்து 3 கோல் போட்டு தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டெழுந்து வெற்றியை (3-2) வசப்படுத்தியது. காலிறுதியில் கூடுதல் நேரத்தில் 2 கோல் அடித்து (3-1) சுவிட்சர்லாந்தை வீழ்த்தி 6-வது முறையாக அரையிறுதியை எட்டியது.

அர்ஜென்டினா அணியில் எதிர்பார்த்தபடியே கேப்டன் லயோனல் மெஸ்சி கதாநாயகனாக ஜொலிக்கிறார். நடப்பு தொடரில் முதல் 5 ஆட்டங்களில் 8 கோல்கள் அடித்து அசத்தினார். கடந்த உலகக் கோப்பையையும் சேர்த்து தொடர்ச்சியாக 9 ஆட்டங்களில் கோல் போட்ட அவர் கால்இறுதி ஆட்டத்தில் கோல் அடிக்க தவறியதால் அவருடைய கோல் பயணத்துக்கு முட்டுக்கட்டை விழுந்தது. என்றாலும் அவரது கால்கள் களத்தில் மீண்டும் நளினமாடி அந்த அணியை 7-வது முறையாக இறுதிப்போட்டிக்கு அழைத்து செல்லுமா? என்பதே ரசிகர்களின் ஆவலாகும். லட்டாரோ மார்ட்டினஸ் (2 கோல்), ஜூலியன் அல்வாரெஸ், என்ஜோ பெர்னாண் டஸ், மாக் அலிஸ்டர், லிசாண்ட்ரோ மார்ட்டினஸ் ஆகியோரும் அந்த அணிக்கு பலம் சேர்க் கின்றனர்.

1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து லீக் சுற்றில் குரோஷியாவையும் (4-2), பனாமா வையும் (2-0) பந்தாடியது. 2-வது ஆட்டத்தில் கானாவுடன் (0-0) டிரா கண்டது. 2-வது சுற்றில் காங்கோவையும் (2-1), 3-வது சுற்றில் மெக்சிகோவையும் (3-2) சாய்த்தது. கால்இறுதியில் கூடுதல் நேரத்தில் நார்வேயை (2-1) வெளியேற்றி 4-வது முறையாக அரையிறுதியை எட்டியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com