

நியூயார்க்,
தண்ணீர் இடைவேளையை அறிமுகப்படுத்தியதற்கு முக்கிய காரணம் வெயில் தான் என பிபா தெரிவித்துள்ளது.
23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. 90 நிமிடங்கள் நடைபெறும் இந்த ஆட்டத்தில் 45 நிமிடங்களுக்கு பின் சிறிது நேரம் இடைவேளை விடப்படும் .
ஆனால், கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக போட்டியின்போது தலா 3 நிமிடம் வீதம் என இரண்டு முறை தண்ணீர் இடைவேளை விடப்படுகிறது. அந்த நேரத்தில் வீரர்கள் சற்று இளைப்பாறி கொள்கிறார்கள். ஆனால் அந்த நேரத்தை பயன்படுத்தி விளம்பர வருவாய் ஈட்டும் நோக்குடன் தண்ணீர் இடைவேளை கொண்டு வரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச் சாட்டுகளை சர்வதேச கால்பந்து சம்மேளன (பிபா) தலைவர் இன்பான்டினோ திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவர் கூறுகையில், 'அனைத்து வணிக ஒப்பந்தங்களும் வெகு காலத்துக்கு முன்பே கையெழுத்திடப்பட்டுவிட்டதால் 'பிபா'வுக்கு கூடுதல் வருவாய் எதுவும் கிடைக்கப்போவதில்லை. இது முழுக்க முழுக்க விளையாட்டு சார்ந்த ஒரு விஷயம். இந்த தண்ணீர் இடைவேளையை அறிமுகப்படுத்தியதற்கு முக்கிய காரணம் வெயில் தான்.
39 நாட்கள் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில் ஒரு அணி 8 ஆட்டங்கள் வரை விளையாட வேண்டி இருக்கும் என்பதால் வீரர்களுக்கு ஓய்வுக்கான நேரம் கிடைப்பது மிகவும் முக்கியம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறினார்.