

லிஸ்பன்,
போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தேசிய அணியின் பயிற்சி முகாமில் இருந்து திடீரென வெளியேறியுள்ளார். டென்மார்க்குக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக இந்த சம்பவம் நடந்துள்ளது.
ரொனால்டோ சமீபத்திய நார்வே அணிக்கு எதிரான போட்டியில் முழுவதுமாக பெஞ்சில் அமர்ந்திருந்த நிலையில், டென்மார்க்குக்கு எதிரான அடுத்த போட்டியிலும் அவரை தொடக்க வீரராக களமிறக்கப் போவதில்லை என்று பயிற்சியாளர் ஜீசஸ் தெரிவித்திருந்தார். அதே நேரத்தில், தங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் ஜீசஸ் கூறியிருந்தார்.
இதற்குப் பிறகு, போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் பெட்ரோ ப்ரோயென்சா உடன் ஆலோசனை நடத்திய ரொனால்டோ, தேசிய அணியின் பயிற்சி முகாமில் இருந்து வெளியேற முடிவு செய்ததாக தெரிவித்தார். தனது வெளியேற்றத்திற்கான உண்மையான காரணங்களை “உரிய நேரத்தில் போர்ச்சுகல் மக்களிடம் தெரிவிப்பேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.
போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பும் ரொனால்டோ முகாமை விட்டு வெளியேறியதை உறுதி செய்துள்ளது. மீதமுள்ள 24 வீரர்களுடன் போட்டிகளுக்கான தயாரிப்புகள் திட்டமிட்டபடி தொடரும் என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ரொனால்டோவின் இந்த திடீர் முடிவு, அவரது சர்வதேச கால்பந்து எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. சர்வதேச கால்பந்து போட்டியில் ரொனால்டோ இனி விளையாடமாட்டார் எனவும் போர்ச்சுகல் அணிகாக அவர் இனி விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆனாலும் அவர் கிளப் போட்டிகளில் விளையாடுவார் என கூறப்படுகிறது.