உலகக் கோப்பை இறுதிப்போட்டி - 96 ஆண்டுகளுக்கு பின் நிகழும் அரிய வரலாற்று மோதல்

இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவும் முன்னாள் சாம்பியன் ஸ்பெயினும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
உலகக் கோப்பை இறுதிப்போட்டி - 96 ஆண்டுகளுக்கு பின் நிகழும் அரிய வரலாற்று மோதல்
Published on

நியூஜெர்சி,

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியனை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நாளை அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த போட்டியில், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவும் முன்னாள் சாம்பியன் ஸ்பெயினும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

48 அணிகள்

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா இணைந்து நடத்தும் 23-வது உலகக் கோப்பை தொடர் கடந்த மாதம் 11-ம் தேதி தொடங்கியது. முதல் முறையாக 48 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் பல முன்னணி அணிகள் எதிர்பாராத விதமாக வெளியேறின. இருமுறை சாம்பியனான உருகுவே லீக் சுற்றிலேயே வெளியேறிய நிலையில், ஜெர்மனி 2-வது சுற்றிலும், ஐந்து முறை சாம்பியனான பிரேசில் 3-வது சுற்றிலும் தொடரை விட்டு வெளியேறியது.

இறுதிப்போட்டி

அரையிறுதியில் முன்னாள் சாம்பியனான பிரான்சை வீழ்த்தி ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பை இறுதிக்குள் நுழைந்தது. மறுபுறம், இங்கிலாந்தை தோற்கடித்த நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, ஏழாவது முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

96 ஆண்டுகளுக்கு பிறகு

1930-ம் ஆண்டு நடைபெற்ற முதல் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் உருகுவே மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதியிருந்தன. அதன்பிறகு, தற்போது 96 ஆண்டுகளுக்கு பிறகு, ஸ்பானிஷ் மொழி பேசும் இரண்டு நாடுகள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறையாகும். இதனால் இந்த இறுதிப்போட்டி வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாக மாறியுள்ளது.

யாருக்கு உலகக் கோப்பை?

மூன்று முறை உலக சாம்பியனான அர்ஜென்டினா தனது பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளுமா? அல்லது முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் மீண்டும் உலகக் கோப்பையை கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை எட்டியுள்ளது. உலக கால்பந்தின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த இறுதிப்போட்டி ரசிகர்களுக்கு விறுவிறுப்பான விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com