

2026 பிபா உலகக் கோப்பை தொடர் நாளை தொடங்கி ஜூலை 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் இந்த மெகா தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணி, ஐஸ்லாந்து அணியுடன் நட்புறவு போட்டியில் இன்று மோதியது.
தசை சோர்வு காரணமாக முழு உடற்தகுதியை எட்டும் முயற்சியில் இருக்கும் மெஸ்ஸி, இந்த போட்டியில் ஆரம்பத்தில் களமிறங்காமல் 69-வது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறக்கப்பட்டார்.
மைதானத்திற்குள் மெஸ்ஸி வந்த சில நிமிடங்களிலேயே அர்ஜென்டினாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை மிகத் துல்லியமாக கோலாக மாற்றிய மெஸ்ஸி, தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார். அவரது கோலின் உதவியுடன் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை வீழ்த்தியது.
இந்த கோல், மெஸ்ஸியின் கிளப் மற்றும் சர்வதேச கால்பந்து கெரியரில் பதிவு செய்த 911-வது கோலாக அமைந்தது. அதேபோல், அர்ஜென்டினா அணிக்காக அவர் அடித்த 117-வது கோலாகவும் இது பதிவானது.
2022 உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி, இந்த முறையும் சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் நோக்கில் களமிறங்குகிறது. மெஸ்ஸியின் உடற்தகுதி குறித்து இருந்த சந்தேகங்களுக்கு இந்த கோல் முக்கிய பதிலாக அமைந்துள்ளது. அவரது கம்பேக் அர்ஜென்டினா ரசிகர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது.