

ஆர்லிங்டன்
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் சுவீடனுக்கு எதிரான போட்டியில் 3-0 என்ற கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது.
அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா நாடுகளில் நடந்து வரும் 23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 48 அணிகள் விளையாடுகின்றன. மொத்தம் 104 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்துள்ளன. 2-வது சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
இதில், அதிகாலை 2.30 மணியளவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ் மற்றும் சுவீடன் அணிகள் விளையாடின. அமெரிக்காவின் நியூஜெர்சி மைதானத்தில் நடந்த இந்த போட்டியின் 45-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் கைலியன் எம்பாப்பே முதல் கோலை போட்டார்.
அதன்பின்னர், கோல் அடிக்கப்படவில்லை. இதனால், சுவீடனுக்கு எதிரான போட்டியின் முதல் பாதியில் 0-1 என பிரான்ஸ் முன்னிலை பெற்றது.
இதன்பின்னர் 2-வது பாதியில் 53-வது நிமிடத்தில் பிராட்லி பார்கோலா 2-வது கோலை போட்டார். 0-2 என்ற கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றியை சுவைக்கும் நிலைக்கு சென்றது. 74-வது நிமிடத்தில் எம்பாப்பே மற்றொரு கோலை போட்டார். இந்த தொடரில் அவருடைய 10-வது கோல் இதுவாகும். இதனால், வெற்றி உறுதியானது.
அதன்பின்னர் இருதரப்பிலும் கோல் அடிக்கப்படவில்லை. போட்டி நேர முடிவில் 3-0 என்ற கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. சுவீடன் தொடரில் இருந்து வெளியேறியது.