

அட்லாண்டா,
உலகக் கோப்பை கால்பந்தில் நேற்றிரவு அட்லாண்டாவில் நடந்த 'எச்' பிரிவு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின், அறிமுக அணியான கேப் வெர்டேவை எதிர்கொண்டது. அனுபவம் இல்லாத அணி என்ற போதிலும் கேப்வெர்டே ஸ்பெயினின் சவாலுக்கு ஈடுகொடுத்து ஆடியது. முதல் பாதியில் ஸ்பெயின் வீரர்கள் பெட்ரி உள்ளிட்டோர் இலக்கை நோக்கி அடித்த 4 ஷாட்டுகளையும் கேப்வெர்டே கோல் கீப்பர் வோசின்யா பிரமாதமாக தடுத்தார்.
பிற்பாதியிலும் ஸ்பெயின் வீரர்களால் கேப்வெர்டேவின் தடுப்பு அரணை உடைக்க முடியவில்லை. 71-வது நிமிடத்தில் மாற்று வீரராக 'இளம் புயல் லாமின் யமாலை கொண்டு வந்தும் நிலைமை மாற்ற முடியவில்லை. இறுதியில் ஆட்டம் கோல் இன்றி (0-0) டிரா ஆனது. நடப்பு தொடரில் ஒரு கோல் கூட அடிக்கப்படாத முதல் ஆட்டம் இதுதான்.
அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள கேப்வெர்டே 5 லட்சம் மக்கள் தொகையை கொண்ட அழகான ஒரு தீவாகும். உலகக் கோப்பையின் தனது முதல் ஆட்டத்திலேயே பலம் வாய்ந்த ஸ்பெயினை சமாளித்து ஒரு புள்ளியையும் ஈட்டியதே அவர்களுக்கு வெற்றி போன்றது தான். ஸ்பெயினை மிரள வைத்த எல்லா சிறப்பும் கோல் கீப்பர் வோசின்யாவையே சேரும்.